கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முன்னாள் அமைச்சர் உதயன் குஹா கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான உதயன் குஹா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களும் உள்ளதாக கூறப்படுகின்றது.
கொல்கத்தாவின் பூல்பகன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குஹா தங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தாக தெரிகின்றது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர். எனினும் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தக் கட்டத்தில் கைது தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் அதற்கான சட்டநடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
