×

சொன்னதை செய்த பாஜ, பெண்களை ஏமாற்றிய தவெக பெண்களுக்கு மாதம் ரூ.2500 கொடுப்பது எப்போது..? விஜய்க்கு எல்.முருகன் சரமாரி கேள்வி

சென்னை: பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2500 கொடுப்பது எப்போது? என்று முதல்வர் விஜய்க்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தவெக தலைவர் விஜய் அவர்கள், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நம்பி தமிழகத்தின் பல லட்சக்கணக்கான பெண்கள் தவெகவுக்கு வாக்களித்தனர். மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவெக அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையிலும், பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவது தொடர்பாக எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் முழங்கிய ரூ.2,500 வாக்குறுதி என்ன ஆனது? பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே இந்த வெற்று வாக்குறுதியை தவெக வழங்கியதா? ரூ. 2.500 எப்போது தரப்படும் என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை.

மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சி அமைத்ததால் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ. 3000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி பாஜ ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறிவித்தபடி அன்னபூர்ணா யோஜனா திட்டம் செயல்பட்டது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ரூ.3000 வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது பாஜ. ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன?. வாக்குறுதியை பற்றி கேள்வி எழுப்பினால், மாநிலத்தின் கடன் சுமையை காரணம் காட்டி முதல்வரும், அமைச்சர்களும் விளக்கம் அளிக்கின்றனர்.

ஒரு அரசின் திறமை என்பது தேர்தல் மேடைகளில் வசனம் பேசுவதில் இல்லை; கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், திறமையான நிர்வாகத்தை வழங்குவதிலும்தான் உள்ளது. எனவே, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், இது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மிகப்பெரிய தேர்தல் மோசடி என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Baja ,Vijay ,Murugan Saramari ,Chennai ,Union Deputy Minister ,L. Murugan Saramari ,Union Associate Minister ,Murugan ,Dweka ,
× RELATED வண்டல் மண் எடுக்க மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்