சென்னை: முதல்வர் விஜய், தனது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார் என எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: முதல்வர் விஜய், தனது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார். அவரது தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்கள், ஆய்வு கூட்டங்கள் மற்றும் இதர உயர்மட்ட அரசு ஆலோசனைகளில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பது குறித்து தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. இவர்கள், விஜய்யின் நெருங்கிய உதவியாளர்களும் நண்பர்களும் ஆவர்.
இவர்கள் அரசில் என்ன அதிகாரப்பூர்வ பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை; இருப்பினும், தலைமை செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகிலேயே அவர்களுக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள்? முதல்வர் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இத்தகைய நபர்களை இதில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகள், அலுவல் விதிகள் மற்றும் அவரது ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை பின்பற்றுவது குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது. இந்த இரு நபர்களின் அதிகாரப்பூர்வ பதவிகளை முதல்வர் பகிரங்கப்படுத்த வேண்டும்; அதோடு, எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
