சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு தீராத பிரச்னையாக இருப்பது வேதனையை தருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிங்கப் பெண்கள் படையை அமைத்துள்ளதாக தவெக அரசு கூறுகிறது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாகி இருப்பது ஏன்?. கும்மிடிப்பூண்டி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனையை காவல்துறை பெற்றுத்தர வேண்டும். போதைப் பொருட்களின் நடமாட்டம், அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் தவெக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கனிமொழி எம்பி (திமுக துணை பொதுச்செயலாளர்): கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?. தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்னும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள தனியாக உதவி எண் கூட இல்லாத ஒரு ‘சிறப்பு படை’யை உருவாக்கி விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தவெக அரசு. எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத ‘சிறப்பு படை’ இருந்து என்ன பயன்?.
செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யவேண்டும். பிஞ்சு என்றும் பாராமல் இத்தகைய மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்குச் சட்டத்தின் முன் எவ்வித விலக்கும் அளிக்கக் கூடாது. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு, நீதிமன்றத்தின் மூலம் மிக விரைவாக, கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த கொடூரச் செயலில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி, சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்டு அச்சிறுமி உயிரிழந்துள்ளதும், பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சுடுகாட்டில் வீசப்பட்டுள்ளதும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. காவல்துறை தீர விசாரித்து குற்றமிழைத்த அனைவரையும் கைது செய்திடவும், உரிய வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும், காவல்துறை ரோந்து, சி.சி.டி.வி. கேமிராக்கள் போன்றவற்றை வலுப்படுத்திடவும் வேண்டும். தமிழகத்தில் பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. பால்மனம் மாறாத குழந்தையை சீரழித்த நான்கு மனித மிருகங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. நால்வரும் கஞ்சா போதையில் தான் இந்த கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த கொடூர குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணமாக இருக்கும் போதை கலாச்சாரத்தை ஒழித்து, அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மதுக்கடைகளை படிப்படியாக மூடவேண்டும்.
டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர், சங்கரன்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9 வயது மாணவி, கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. கும்மிடிப்பூண்டியில் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதல்வர் ஜோசப் விஜய் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?.
வானதி சீனிவாசன் (பாஜ மகளிர் அணி தேசிய தலைவர்): திருவள்ளூரில் வட மாநில தம்பதியரின் மூன்று வயது குழந்தை வடமாநில இளைஞர்களால் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலம் என்ற பெருமை பெற்ற தமிழகத்தில் இன்று பிஞ்சு குழந்தைகள் கூட காமுக அரக்கர்களின் கீழ்தரமான செயலுக்கு பலியாகி இருப்பது கடும் வேதனைக்குரியது. ஆரம்பித்த நாள் முதல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்.
அண்ணாமலை (வீதி லீடர்ஸ் இயக்க தலைவர்): கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியில் அர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?. தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், தங்குமிடம் என அனைத்து தகவல்களையும், தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும்.
இன்னமும் சினிமா பாடலுக்கு மியூசிக் போடுதா போலீஸ்
மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை வடமாநில தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்?
ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களை தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
