×

பாஜ எஜமானர்களை மகிழ்விப்பதற்காக துக்கடா கட்சியுடன் இணைவது அபத்தமானது: அதிருப்தி எம்.பி.க்கள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அதிருப்தி எம்பிக்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியுடன்(என்சிபிஐ) இணைவதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மம்தா ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கையை அபத்தமானது என்று நிராகரித்துள்ளனர்.

இது குறித்து மூத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான சவுகதா ராய், ‘‘எந்த கட்சியின் சின்னத்தில் தேர்ந்தெடுக்கபட்டீர்களோ அந்த கட்சிக்கே துரோகம் இழைத்த பிறகு உங்கள் தொகுதி மக்களை எப்படி எதிர்கொள்வீர்கள்? இந்த இணைப்பு அபத்தமானது. துக்கடா கட்சியான என்சிபிஐயை யாருக்கு தெரியும்? அவர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று தாங்கள் இப்போது என்சிபிஐ -யின் ஒரு பகுதி என்று மக்களிடம் கூற முடியுமா? தங்களது பாஜ எஜமானர்களை மகிழ்விப்பதற்காக துரோகிகள் காட்டும் விரக்தியையே இந்த இணைப்பு பிரதிபலிக்கிறது. பாஜவின் நேரடி ஆதரவுடன் அவர்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தனர். இது அபத்தமானது. துரோகிகளுக்கு மக்களின் ஆதரவு இருக்காது” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘சர்தார் படேல் வகித்த பதவிக்கு முற்றிலும் அவப்பெயரை தேடித்தரும் வகையிலான ஒரு விரக்தியடைந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்திய ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் மிகவும் கீழான நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். 20 திரிணாமுல் எம்பிக்களின் சட்டவிரோத பிரிப்புக்கும், வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அங்கீகாரம் பெறாததும் இதுவரை அதிகம் கேள்விபடாததுமான ஒரு அரசியல் கட்சியுடன் அவர்கள் மேற்கொண்ட முற்றிலும் சந்தேகத்துக்குரிய இணைப்புக்கும் அவரே சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார்” என் று குறிப்பிட்டுள்ளார்.

பாஜ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,’ அதிருப்தி எம்பிக்கள் என்சிபிஐயில் இணைந்து என்டிஏ மற்றும் அரசு மசோதாக்களுக்கு ஆதரவளித்தால் அது நாட்டிற்கு நல்லது ” என்றார்.

நோட்டாவை விட குறைந்த ஓட்டு
2023ம் ஆண்டு திரிபுரா தேர்தலில் நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சியானது மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் கட்சியின் வேட்பாளர்கள் நோட்டா வாக்குகளை விடக் குறைவாகவோ அல்லது சற்று அதிகமான வாக்குகளை மட்டுமே பெற்றனர். இந்த கட்சியில் திரிணாமுல் எம்பிக்கள் இணைவதாக அறிவிப்பை தொடர்ந்து இந்த கட்சி கவனம் பெற்றுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சியில் திரிணாமுல் அதிருப்தி தலைவர்கள்
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி பங்கேற்ற கொல்கத்தா மாநகராட்சி நிகழ்ச்சியில் திரிணாமுல் அதிருப்தி எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் நாத்தனார் கஜரி பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tukada party ,BJP ,Trinamool Congress ,Kolkata ,Trinamool Congress party ,West Bengal ,Trinamool Congress party… ,
× RELATED வண்டல் மண் எடுக்க மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்