×

அதிக மகசூல் கிடைக்க சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுறுத்தல்

 

சிவகங்கை, ஜூன் 15: டி.ஏ.பி.க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பெரும்பாலும் டி.ஏ.பி, யூரியா, பொட்டாஷ் உரத்தையே அதிகளவே பயன்படுத்துகின்றனர். டி.ஏ.பி. உரம் தயாரிப்பிற்கு தேவைப்படும் மூலப் பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உள்நாட்டில் டி.ஏ.பி உர உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், டி.ஏ.பி. உரங்கள் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களான அமோனியம் பாஸ்பேட், சல்பேட் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி, தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர்களுக்கு காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துவதால் பயிரின் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் உள்ளது. சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்து, நீரில் எளிதில் கரையும் தன்மை கொண்டதால் வேர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Sivaganga ,Sivaganga District ,Joint Director ,Agriculture’s Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...