×

பெரம்பலூர் மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வளாகம் அமைக்கப்படுமா?

பெரம்பலூர், ஜூன் 24: அரசு பள்ளிகளிலும், தனியார் கட்டிடங்களிலும் இயங்கும் கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகங்கள். மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த கூட்ட அரங்கம்கூட கிடையாது. தனியார் கட்டிடங்களுக்கான வாடகையே ஆண்டுக்கு பல லட்சம் விரயம் ஆகிறது.

மாநிலத்தின் மையத்தில் உள்ள மிகச் சிறிய மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்து 1995 ஆம் ஆண்டு உதயமாகி தற்போது பெரம்பலூர் மாவட்டத்தின் வயது 31 ஆகிறது. கால் நூற்றாண்டுகளை கடந்த பின்பும் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்னமும் பள்ளிக் கல்வித்துறை, அதற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வளாகம் இல்லாமல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம், ஒருங்கிணைந்த கூட்டம் மன்றம் என முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப் படாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகம் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் கட்டிடத்திலும், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அலுவலகம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அலுவலகம் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலும் இயங்கி வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் பெரம்பலூர் புது பஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே இயங்கி வருகிறது. அதேபோல் 143 உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்றாக பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கோ, கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் விழாக்களுக்கோ ஏதுவாக பிரத்தியேக கூட்ட அரங்கம் இல்லாமல் உள்ளது.

குறிப்பாக மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) அலுவலகம், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவற்றுக்காக ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வாடகை பணமாக மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. இதனால் பெரம்பலூர் துறையூர் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சாரண சாரணியர் கூட்ட அரங்கில் தான் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டமும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் காலை மாலை என ஷிப்ட் வழியாக நடத்தப் பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் தயாரித்து வழங்கப்படும் பாட புத்தகங்களும் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடங்களிலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ள அவல நிலை தான் தொடர்ந்து வருகிறது.

அதேபோல் அரசு தேர்வுத் துறையால் பயன் படுத்தப் படும் வினாத் தாள்கள், விடைத்தாள்களை வைக்கவும், அரசு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தவும், அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டிடங்களையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை காலமெல்லாம் இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலமாவது மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்து பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வளாகம் அமைக்க ஏற்பாடு செய்தால், மாவட்டத்தின் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் இருந்து, கடைகோடி எல்லைகளில் இருந்து வரக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவியர் அனைவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைத் தனியாகவும் மாவட்ட கல்வி அலுவலர்களை தனித் தனியாகவும் சந்திக்க வேண்டிய அவல நிலை ஏற்படாது. அந்தந்த கல்வித் துறை அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்திலும், அரசு பள்ளிகளிலும் இயங்க வேண்டிய தேவைஇருக்காது.

எனவே தற்போது அமைந்துள்ள தவெக அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் ராஜ்மோகன், மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி கூட்டு முயற்சியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வளாகம் அமைக்கப்படுமா என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், பெரம்பலூர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவ மாணவியரும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Perambalur ,
× RELATED கலெக்டர் அலுவலக சாலையில் பரபரப்பு:...