பூந்தமல்லி: மதுரவாயல் அருகே பெயின்ட், மருத்துவ உபகரணங்கள் சேமித்து வைக்கும் குடோன்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மூச்சு திணறல், கண் எரிச்சலால் மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடி பத்மாவதி கார்டன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயின்ட் குடோன் உள்ளது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெயின்ட் பொருட்கள், தின்னர், கப்பல்களுக்கு பயன்படும் நேர்த்தியான பெயின்ட் வகைகள் சேமித்து வைக்கப்பட்டு சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் அருகில் மருத்துவ உபகரணங்கள் சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. இங்கு, கண் சிகிச்சை தொடர்பான மருந்துகள், ஐலென்ஸ் மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படக்கூடிய மருத்துவ உபகரணங்கள் சேமித்து வைக்கப்பட்டு பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் பெயின்ட் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் தீ மளவென பரவி பெயின்ட் குடோன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் எழுந்த கரும்புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் குடியிருப்புவாசிகள் மூச்சு திணறல், கண் எரிச்சலால் அவதிப்பட்டனர். தீ விபத்தினால் 2 குடோன்களில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெயின்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வானகரம் போலீசார், தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
