ஸ்பிக்நகர்: பழைய கஞ்சியும், சின்ன வெங்காயமும் சாப்பிட்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என 103 வயது முதியவர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தில் வசிப்பவர் ராஜமணி சாமுவேல்ராஜ். விவசாயியான இவருக்கு 103 வயதாகிறது. இவர் இந்த வயதிலும் துடிப்புடன் தனது வேலைகளை தானே செய்வதுடன், ஆரோக்கியமாக வாழ்கிறார். தனது இளமை ரகசியம் குறித்து, ராஜமணி சாமுவேல்ராஜ் கூறியதாவது: நான் 1922-ம் ஆண்டு பிறந்தேன். எனக்கு 103 வயது நிறைவடைந்துவிட்டது.
நான் அந்த காலத்தில் எங்கள் கிராமத்து பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு வரை படித்தேன். 32 வயதில் எனக்கு 1958-ல் திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜாத்தி. எங்களுக்கு 7 பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, கொள்ளுப்பேரன் உள்ளனர். என் மனைவி ராஜாத்தி தனது 52-வது வயதில் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். மனைவியின் இறப்பு எனக்கு பேரிழப்பு. என் மனைவி மிகவும் பாசமுடையவள். அவளை எல்லோருக்கும் பிடிக்கும். என் மீது உயிரையே வைத்திருந்தாள்.
நாங்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்வோம். பிறகு பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் பார்த்து ஆறுதல் அடைந்து கொண்டேன். வீட்டில் மனைவி இல்லாதது சொல்லப்போனால் “நிலா இல்லாத வானம் தான்’. மனைவி இறப்புக்கு பின் நான் தான் சமையல் செய்வேன். எனக்கு பழைய கஞ்சிதான் மிகவும் பிடிக்கும். தினமும் கஞ்சியும், சின்ன வெங்காயமும் தான் உணவு. அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பேன். கை, கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்வேன். பிறகு செடிகளுக்கு தண்ணீர் விடுவேன்.
நானே சமைத்து சாப்பிடுவேன். 3நாட்களுக்கு ஒருமுறை தான் சமையல் செய்வேன். அதை கஞ்சியாக வைத்து சாப்பிடுவேன். தண்ணீர் நன்றாக குடிப்பேன். எனக்கு பீடி, சிகரெட், புகையிலை, மது அருந்தும் பழக்கம் எதுவும் கிடையாது. இதனால் மருத்துவமனைக்கும் சென்றது கிடையாது. நோய் நொடியின்றி வாழ்கிறேன். இப்போதும் எனது வேலைகளை நானே செய்கிறேன். ஆரோக்கியமாக இருந்தால், எந்த வயதிலும் யார் உதவியும் இன்றி வாழலாம். ஆரோக்கியம் போய்விட்டால், நமக்கும் சிரமம். குடும்பத்தாருக்கும் சிரமம்.
எனவே, யாருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாது. இரவு 7 மணிக்கு சாப்பிட்டுவிட்டு, 8 மணிக்கெல்லாம் தூங்கி விடுவேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை நிறைய உண்டு. உண்மை, உழைப்பு, ஒழுக்கம் இது தான் என் நீண்ட நாள் வாழ்வில் தாரக மந்திரம். எங்கள் கிராமத்தில் ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தால் ஊரிலே வயதில் முதியவர் என்ற அடிப்படையில் என்னை அழைத்து கவுரவிப்பார்கள். இது எனக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது., இவ்வாறு அவர் கூறினார்.
