×

மன்னிப்பு கேட்டும் தொடரும் விவகாரம்: ரூ.370 பிரியாணி சர்ச்சைக்கு நடிகை பூனம் பாண்டே பதிலடி

 

மும்பை: பெண்ணுடன் டேட்டிங் செல்லுதல் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தால், நடிகை பூனம் பாண்டே பதிலடி கொடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளரான ஸ்டாண்ட்-அப் காமெடி நடிகர் பிராணிக் மோர் நடத்திய நேரலை நிகழ்ச்சியில், ஒரு நபர் தன்னிடம் பேசிய போது, வயது முதிர்ந்த பெண்ணுடன் ‘டேட்டிங்’ சென்று 370 ரூபாய் செலவில் சிக்கன் பிரியாணி வாங்கி கொடுத்ததாகவும், அந்த பணத்தை அவரிடமிருந்து ஈடுகட்ட விரும்புவதாகவும் சர்ச்சையாக பேசினார். இதனை கேட்டு பிராணிக் மோர் சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை குவித்தது.

இதுதொடர்பாக நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட பதிவில், ‘370 ரூபாய் பிரியாணி கதையை கேட்டேன். பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் 370 ரூபாயை விட அதிக விலை கொண்டவை. அதனை நாங்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவோம்’ என்று மிகுந்த கோபத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பிராணிக் மோர் தனது சமூக வலைதள பக்கத்தை முடக்கியதுடன், ‘அந்த நபரின் கருத்தை தட்டிக்கேட்காமல் சிரித்தது எனது தவறுதான். இந்த தவறான முடிவிற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர் உட்பட 3 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரா மாநில சைபர் போலீசார், சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைப் பரப்பியதாக ஸ்டாண்ட்-அப் காமெடி நடிகர் பிராணிக் மோர், வெப் டெவலப்பர் இமான்ஷு ஜங்ரா மற்றும் டாக்டர் செஜல் பவார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ளனர். சிக்கன் பிரியாணி விவகாரம் மட்டுமின்றி, மருத்துவப் படிப்புக்காகப் பயன்படுத்தப்படும் இறந்தவர்களின் உடல்கள் குறித்து அவதூறாகப் பேசியதும் போலீசாரால் கண்டறியப்பட்டது; அதனால் சம்பந்தப்பட்ட மூவரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததுடன், அரியானா மாநில போலீஸ் டிஜிபியிடம் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Poonam Pandey ,Mumbai ,Pranik More ,
× RELATED நடப்பாண்டு நீட் தேர்வு எழுத கூடுதலாக 15...