×

ஹரித்வாரில் சினிமா படப்பிடிப்பு; ‘பார்’ பெயர் பலகையால் மக்கள் ஆவேசம்: உத்தரகாண்டில் பரபரப்பு

 

ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. புனித நகரமான ஹரித்வாரில் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட செட்டில், உணவகம் ஒன்றின் தற்காலிக பெயர் பலகையில் ‘கபே மற்றும் பார்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. புனிதமான இந்த ஊரில் ‘பார்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது உள்ளூர் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, அவர்கள் படப்பிடிப்பு குழுவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பிரச்னை உருவானது.

‘புனிதமான இந்த நகரத்தில் ‘பார்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது கலாசார அடையாளத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது’ என்று பொதுமக்கள் ஆக்ரோஷமாக கூறினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. படக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். இருந்தும் பிரச்னை அதிகமானதால், சில மணி நேரங்களுக்கு பின் சர்ச்சைக்குரிய பெயர் பலகை அகற்றப்பட்டது. இந்த மோதல் நடந்த போது நடிகர் இம்ரான் ஹாஷ்மி அங்கு இல்லை என கூறப்படுகிறது.

Tags : Haridwar ,Uttarakhand ,Bollywood ,Emraan Hashmi ,Haridwar, Uttarakhand ,
× RELATED நடப்பாண்டு நீட் தேர்வு எழுத கூடுதலாக 15...