- சிஐடி
- அபிஷேக்
- மேற்கு வங்கம்
- கொல்கத்தா
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- பொதுச்செயலர்
- அபிஷேக் பானர்ஜி
- மேற்கு வங்க சட்டமன்றம்…
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியிடம் கையெழுத்து மோசடி புகார் தொடர்பாக சிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு தொடர்பாக கடந்த மே 6ம் தேதி நடந்த கூட்டத்தில் 70 திரிணாமுல் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாகக் கூறி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் சோபன்தேப் சட்டோபாத்யாய என்பவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், இந்தத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள 14 கையெழுத்துக்கள் போலியானவை என்றும், அவை பிளாக் லெட்டர்ஸ் முறையில் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு எம்எல்ஏ-க்கள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 28ம் தேதி முதல் போலீசார் இந்த மோசடி வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் அலுவலகம் மற்றும் அவரது உறவினரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் அலுவலகங்களில் சிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியும், 70 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட அந்த அசல் தீர்மான ஆவணங்கள் சிக்கவில்லை. இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியதைத் தொடர்ந்து, டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்பியானா அபிஷேக் பானர்ஜி நேற்று மாலை 5.50 மணிக்கு சிஐடி தலைமையகத்தில் ஆஜரானார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட மூன்று சம்மன்களைப் புறக்கணித்த அவர், சுமார் ஆறு மணிநேர விசாரணைக்குப் பிறகு இரவு 11.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக டெல்லியில் இருந்து திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் ஒரு தரப்பினர் ‘கையெழுத்துத் திருடன்’ என கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விசாரணையின் போது, மே 20ம் தேதி பேரவை தலைவரிடம் வழங்கப்பட்ட தீர்மானப் புத்தகம் மற்றும் வருகைப் பதிவேட்டின் உண்மைத் தன்மையைச் சோதிக்க தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
