×

இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மறைவு : பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மாரடைப்பால் காலமானார். ஜெர்மனியின் மூனிக் நகரில் நடைபெற இருக்கும் உலககோப்பை தொடருக்காக இந்திய அணியுடன் சென்றிருந்த அவருக்கு அங்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால், சில நாள்களுக்கு முன்னர் அவர் அவசரமாக நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணா வியாழக்கிழமை (ஜூன் 11) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவை தேசிய துப்பாக்கிச் சுடும் சங்கம் உறுதி செய்துள்ளது. அவரது திடீர் மரணம் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜஸ்பால் ராணா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அவர் நிகழ்த்திய சிறப்பான சாதனைகள் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். அதேவேளையில், இளம் விளையாட்டு வீரர்களை மிகுந்த அர்ப்பணிப்புடன் வழிநடத்தி அவர்களைச் செதுக்கியதில் அவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது என பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதனிடையே இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் உட்பட பல்வேறு இந்திய வீரர்களுக்குப் பயிற்சியாளராகத் திகழ்ந்த ஜஸ்பால் ராணாவின் மறைவு இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்துக்குப் பேரிழப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்காக 9 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களைக் குவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற அவர், இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியின் பயிற்றுநராக இருந்து வந்தார்.

 

Tags : Jaspal Rana ,PM Modi ,New Delhi ,Indian ,World Cup ,Munich, Germany ,
× RELATED மாஜி பிரதமரின் 50 ஆண்டுகால நாடாளுமன்ற...