மெக்சிகோ: பிபா 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்றிரவு பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த உலகக்கோப்பை மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துவதால்,முதல்முறையாக 3 நகரங்களிலும் தொடக்க விழா நடக்கிறது. மெக்சிகோவில் நேற்று நடந்த தொடக்க விழாவில் கொலம்பிய பாடகி ஷாகிரா, நைஜீரியா பாடகர் பர்னா பாயுடன் இணைந்து டாய்..டாய்.. பாடலுக்கு நடனமாடினர்.
மேலும், நடிகை பெலிண்டா, பாடகர்கள் டேனி ஓசியன், பால்வின், பாடகி லிலா டவுன்ச் ஆகியோரும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் மெக்சிகோ-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இன்று காலை 7.30 மணிக்கு அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் தென்கொரியா-செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. முன்னதாக இங்கும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதுவரை 32 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த இந்த தொடரில் முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்க உள்ளது. மொத்தம் 39 நாட்கள் நடக்கும் இந்த தொடரில் 104 போட்டிகள் நடக்கிறது. இதற்கு முன் 1988 முதல் 2022 வரை நடந்த 7 உலகக்கோப்பை தொடர்களில் 64 போட்டிகள் மட்டுமே நடந்து உள்ளது. மொத்தம் 16 நகரங்களில் நடக்க உள்ள போட்டிகளில் 71 நாடுகளில் உள்ள 449 கிளப்புகளை சேர்ந்த 1,248 வீரர்கள் விளையாடுகின்றனர். இதில் 357 வீரர்கள் ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று உள்ளனர்.
891 வீரர்கள் முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாட உள்ளனர். போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி ஆகியோர் 6வது உலகக்கோப்பை விளையாடுகின்றனர். இதில் மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்து விட்டார். ஆனால், ரொனால்டோ இதுவரை ஒரு உலகக்கோப்பையையும் வெல்லவில்லை. இந்த உலகக்கோப்பையே அவருக்கு கடைசி என்பதால், இந்த தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்வாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.
