தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்; காங். வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

 

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் வருகிற 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1ம் தேதி துவங்கி, ஜூன் 8ம் தேதியுடன் முடிந்தது.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர சுயேட்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி ஆழ்வார், ஆவடி வி.ஜெயக்குமார், தமிழ் செல்வமணி, கந்தசாமி, ராஜன்பாபு உள்ளிட்ட 12 சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (9ம் தேதி) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. பரிசீலனையின்போது காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி மனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவருக்கு காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் முன்மொழிந்து இருந்தனர். சுயேட்சைகள் 12 பேருக்கு ஒரு எம்எல்ஏ கூட முன்மொழியாததால், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்ய்பட்டது. ஆனாலும், வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 11ம் தேதி (இன்று) மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை வரை பிரவீன் சக்ரவர்த்தி தனது வேட்புமனுவை வாபஸ் பெறாத காரணத்தால், இன்று மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி அறிவித்தார். வெற்றிபெற்றதற்கான சான்றிதழும் பிரவீன் சக்ரவர்த்தியிடம் வழங்கப்பட்டது. பிரவீன் சக்ரவர்த்தி 2028ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரை (இரண்டு ஆண்டுகள்) மாநிலங்களவை எம்பியாக பதவி வகிப்பார்.

Related Stories: