×

சூழ்நிலையை மாசுபடுத்தும் ஓர் அங்கம்; இரைச்சல் இல்லா உலகம் கேட்போம்: கண்ணுக்கு புலப்படாத அச்சுறுத்தல்

 

ஒலி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். அது நம் அன்றாட வாழ்விற்கு தேவையான ஒன்று. காற்றில் பயணிக்கக்கூடிய ஒலியை நம்மால் பார்க்கவோ, சுவைக்கவோ அல்லது நுகரவோ முடியாது. இது பொருட்களின் அதிர்வுகளால் உருவாகிறது. சில நேரங்களில் ஒலி கேட்பதற்கு இதமாகவும், பல நேரங்களில் சத்தமான, இரைச்சலாக எரிச்சல் தரும் வகையில் இருக்கலாம். சலிப்படைய செய்யும் பணிகளை மென்மையான ஒலி, ஓசைக்களுக்கு இடையே சிறப்பாக, விழிப்புடன் செய்ய முடியும். ஒலியின் அளவு உயிரினங்கள் கேட்க கூடிய அளவில் இருத்தல் வேண்டும். ஆனால் ஒலியின் அளவு கடுமையாக இருந்தால் செவிகளின் உற்புறத்தில் காயத்தை ஏற்படுத்தி விடும்.

தொடர்ந்து 15 நிமிடங்கள் பலத்த ஒலியை கேட்க நேர்ந்தால் தற்காலிகமாக கேட்கும் திறனை இழக்க செய்துவிடும். ‘‘இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும். ஏழாம் கடலும், வானும், நிலமும் என்னுடன் விளையாடும்…’’ இசைக்கு இயற்கையையே வசீகரிக்கும் மாபெரும் சக்தி உண்டு என்பதை விளக்கும் தத்துவார்த்தமான பாடல். ஆனால் இசையைக்கூட அளவோடு வைத்து கேட்டால்தான் ரசிக்க முடியும். ஆனால் ஆசை மிகுந்த ஓசையுடன் கேட்டு கொண்டிருந்தால், காதுகள் கேட்காமலேயே போய்விடும். மனிதர்களையும், பிற உயிரினங்களையும் பாதிக்கும் உயர் ஒலி அளவிற்கு தொடர்ந்து ஆட்படுவது ‘ஒலி மாசுபாடு’.

‘இரைச்சல்’ அதாவது ‘Noice’ எனும் ஆங்கிலச்சொல், வாந்தி எடுக்க வேண்டும் என்ற உணர்வை தரும் ஒரு நோயை குறிக்கும் ‘நாசியா’ (Nausea) என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. ‘இரைச்சல்’ மனிதர்களுக்கு அமைதியை, உறக்கத்தை கெடுத்து, இயல்பான செயல்பாடுகளில் குறுக்கிடுகிறது. மேலும் ஒருவரின் வாழ்க்கை தரத்தை சீர்குலைக்கிறது. நம்மில் அசவுகரியத்தை ஏற்படுத்தும் ஒரு விரும்பத்தகாத, அருவருப்பானது பேரொலி. ஒலியின் செறிவு டெசிபல்களில் (dB) அளக்கப்படுகிறது. மனித காதுகளால் கேட்கக்கூடிய மிக மெல்லிய ஒலி 1 டெசிபல்.

நாகரிக உலகில் நம்மை சுற்றியுள்ள இரைச்சல் அதிகரித்து வருவதால், ஒலி மாசுபாடு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பூமியில் உள்ள உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பது வளிமண்டல மாசுபாடு மட்டுமல்ல. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒலி மாசுபாடு உடல்நலத்திற்கு மிகவும் அபாயகரமான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். சாதாரணமாக உரக்க பேசுவது, அதிக சத்தத்தோடு பாட்டு கேட்பது போன்ற ஒலி மாசுக்களை பெரிய விஷயமாக நாம் எடுத்து கொள்வதில்லை. அதை ஒரு மாசாகவும் நாம் நினைத்து பார்ப்பதில்லை. ஒரு குழந்தை தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அழுவதை அந்த வீட்டில் உள்ளவர்கள் கவனித்தனர்.

உற்று கவனித்தபோது, தினசரி அந்த நேரத்தில் அவர்கள் வாஷிங் மெஷின் போடுவது வழக்கமாக இருந்தது. அந்த சத்தம் கேட்டு குழந்தை அழுதது. இதுவும் ஒரு ஒலி மாசுதான். ஒலி மாசு என்பது நிலம், நீர், காற்று மாசுறுதல் போன்று தேங்காவிட்டாலும், அமைதி சூழலை கெடுப்பதால், சூழ்நிலையை மாசுபடுத்தலில் ஓர் அங்கமாக கருதப்படுகிறது. சிலருக்கு இனிமையாக இருக்கும் ஒலி, வேறு பலருக்கு எரிச்சலாக தெரியும். எனவே, ஒலி அது வெளியேற்றும் உரத்த தன்மை, நேரம், ரிதம், தாள லயம் போன்றவை கேட்போரின் மனநிலையை பொறுத்து மாசுபடுத்துகிறதா, இல்லையா என்பதை அறிய முடிகிறது.

ஒலியின் அளவு 35 முதல் 60 டிபி வரை சாதாரணமாக தாங்கக்கூடியதாக இருக்கிறது. 80 டிபிக்கு மேல் உள்ளது காது கேளாமையை ஏற்படுத்தும். 140 டிபி எரிச்சலான வேதனையை தரக்கூடியது. ஒலிமாசு சகிப்புத்தன்மை இன்மை, எரிச்சல் மற்றும் விரும்பத்தகாத உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO), 65 டெசிபல்களுக்கு மேற்பட்ட சத்தத்தை ஒலி மாசுபாடாக வரையறுக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்வதானால், சத்தத்தின் அளவு 75 டெசிபல்களை தாண்டும்போது அது தீங்கு விளைவிப்பதாகவும், 120 டெசிபல்களுக்கு மேல் இருக்கும்போது வலியை உண்டாக்குவதாகவும் மாறுகிறது.

எனவே பகல் நேரங்களில் சத்தத்தின் அளவை 65 டெசிபல்களுக்கு குறைவாக வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் சுற்றுப்புற சத்தத்தின் அளவு 30 டெசிபல்களுக்கு மேல் இருந்தால், நிம்மதியான உறக்கம் சாத்தியமில்லை. தொழில் மற்றும் நகர மயமாக்குதல் போன்ற மனித மேம்பாட்டின் விளைவுகளே ஒலி சீர்கேடு. தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்களாலும் 65 முதல் 85 டிபி வரை இரைச்சல் ஏற்படுகிறது. கட்டுமான பணிகள், வானூர்திகள், வீட்டு உபயோக பொருட்களின் இயக்கம், வானொலி, தொலைக்காட்சி, ஒலிப்பெருக்கிகள் மூலமாகவும் அதிகபட்ச ஒலிமாசு ஏற்படுகிறது.

ஒரு கொண்டாட்டத்தின் அதீத இரைச்சல் அளவை பொறுத்து குடும்பத்தின் அந்தஸ்து இருப்பதாக நம்பும் பல குடும்பங்கள் இருக்கவே செய்கின்றன. ‘‘நாங்கள் காசு கொடுத்திருக்கிறோம்; அதனால் எவ்வளவு சத்தம் வைக்க வேண்டும், எத்தனை மணி நேரம் கொண்டாடுவோம் என்பதை யாமே முடிவு செய்வோம்’’ என்ற அதிகார தோரணைதான் அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. வெடிக்கப்படும் பட்டாசுகளாலும் பேரிரைச்சல் ஏற்பட்டு மற்றவர்களை பெருந்துன்பத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் திருமணம் முதலான விழாக்களில் நிலவும் இரைச்சல் பற்றி நம் அனைவருக்கும் தெரியும்.

இரைச்சலால் நெஞ்சு படபடப்பு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு தொடங்கி மரணம் வரை நீள்கின்றன. அளவுக்கு மீறிய இரைச்சல் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு காது கேளாமையை ஏற்படுத்துகிறது. மேலும் தூக்கமின்மை காரணமாக பலவித நோய்கள் தோன்ற காரணமாக அமைகிறது.
ஒலிமாசு காரணமாக நம் இயங்கு தசைகள் பாதிக்கப்பட்டு மூளை, கண்கள் மற்றும் தலைப்பகுதியில் உள்ள தசைகளின் விறைப்பு தன்மை அதிகரிக்கிறது. கை, கால் விரல்கள் மற்றும் செவிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் வெகுவாக குறைகிறது. மூச்சு விடுதல், இதயத்துடிப்பு மற்றும் உடல் அசைவுகளில் மாற்றம் தோன்றுகிறது.

நரம்பு மற்றும் ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு, பாலியல் செயல்கள் மற்றும் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மனோதத்துவ ரீதியான பாதிப்பு, தலைவலி, மயக்கம், வாந்தி, எரிச்சல், கோபம், ரத்த அழுத்தம் அதிகரித்தல், இதய கோளாறுகள், சரும நிறம் மாறுதல், பெண்களுக்கு கருச்சிதைவு, அமைதியின்மை தோன்றுகிறது. பிறக்கும் குழந்தையின் பார்வை பாதிக்கப்படுதல், நமது கவனத்தை திசை திருப்பி மனநிலையை சீர்குலைத்தல் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களை போலவே விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கடும் பாதிப்புகளை உண்டாக்குகிறது. விலங்குகளின் வாழ்க்கை முறையானது கேட்கும் திறனை சார்ந்தே உள்ளது.

தொடரும் ஒலி மாசுபாட்டிடால் வளர்ப்பு பிராணிகள் தங்கள் நடத்தைகளில் மாறுதலடைகின்றன. அவை திசை திருப்பப்பட்ட பல நடத்தை பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளன. ஒலி மாசுபாட்டால் விலங்குகளின் கேட்கும் திறன் குறைந்து, அவைகள் எளிதில் மற்றவற்றுக்கு இரையாகி விடுகின்றன. மேலும் பல விலங்குகள் வேட்டையாட முடியாமலும், எண்ணிக்கையில் குறையவும் செய்கின்றன. இதனால் உயிரிகளின் சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. இனப்பெருக்கத்திற்கான விலங்குகளின் ஒலியை இணையால் கேட்க முடியாமல் அவ்வினமே அழியும் சூழல் உண்டாகிறது. இடம் பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலியானது பாதிப்படைந்து, அவற்றின் பாதையை மாற்றி அழிவிற்கு காரணமாகின்றன.

ஒலி மாசுபாட்டினால் விலங்குகள் அதிகமாக சத்தமிடுகின்றன. இதனால் ஒலி மாசுபாடு மேலும் அதிகரிக்கிறது. மேலும் பல்வேறு விபத்துகளுக்கும் ஒலிமாசு காரணமாகிறது. ஊர்வனகூட இரைச்சலால் பாதிக்கப்படுகின்றன. இரைச்சலால் முதலைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு நோய்த்தொற்று உருவாவதாகவும், டால்பின்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இரைச்சல் மாசை கட்டுப்படுத்த நம்மிடம் ‘ஒலி மாசு விதிகள் 2000’என்ற அருமையான சட்டம் ஒன்று இருக்கிறது. ஆனால் நாம் அதை பின்பற்றுவது இல்லை. 85 டெசிபலுக்கும் அதிகமான ஒலியளவு மனிதர்களின் செவித்திறனை பாதிக்கக்கூடும்.

ஒலிமாசு விதிகளின்படி குடியிருப்பு பகுதிகளில் ஒலியளவு 55 டெசிபலை மீறாமலிருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நாம் பட்டாசுகளை வெடிக்கும்போது 140 டெசிபல் அளவையே தாண்டிவிடுகிறது. அளவுக்கு அதிகமாக இரைச்சல் கேட்கும் இடத்தை விட்டு நகர்ந்து விடுவது நல்லது. வானொலி, தொலைக்காட்சிகளை எப்பொழுதும் அலற விடாமல் குறைந்த ஒலியில், தேவையானபொழுது மட்டும் வைத்து கேட்பது நலம். அதிகபடியான மரங்களை வளர்ப்பது ஒலிமாசுபாட்டை தடுக்கும்.

குறைந்தபட்சம் தேவையில்லாமல் இருக்கும் மரங்களை வெட்டி விடாதீர். வீட்டில் வளர்க்க முடியாதவர்கள் சாலை ஓரங்களிலாவது சில மரங்களை வளர்க்கலாம். விழா காலங்களில் அதிக பட்டாசுகள் மற்றும் நீண்ட நேரம் வெடிப்பதையும் குறைக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொழிற்சாலைகள், ரயில்வே நிலையங்கள் போன்ற பக்கங்களில் குடியிருப்பு பகுதிகளை அமைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒலி மாசுபாட்டை குறைப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்பதை நாம் உணர வேண்டும். ஒலி மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்கி, நலமோடு வாழ்வோம்.

நாம் என்ன செய்யலாம்?
காலநிலை மாற்றத்தினால் பல்வேறு சீரழிவுகளை சந்தித்துவரும் நம் பூமியை பாதுகாத்திட தனிநபராக என்ன செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது. சிறுதுளி பெருவெள்ளம் என்பதை போல நாம் செய்யும் சிறுசிறு செயல்கள் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

* அதிக ஒலி ஏற்படுத்தும் காற்று ஒலிப்பான்களை தடை செய்ய வேண்டும்.
* கட்டிடங்களில் ஒலிப்புகா அமைப்புகளை நிறுவ வேண்டும்.
* பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அருகில் அமைதி மண்டலங்களை ஏற்படுத்த சமூக சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
* பொது இடங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
* இசைக்கருவிகளின் ஒலி, விரும்பத்தக்க வரம்புகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
* அடர்ந்த மரப்போர்வை, ஒலி மாசுபாட்டை தடுப்பதற்கு பயனுள்ளதாக காணப்படுகிறது.
* காடுகள், மலைகள் மற்றும் சுரங்க பகுதிகளில் வெடிப்பொருட்களை பயன்படுத்த கூடாது.
* சிறந்த நகர்ப்புற திட்டமிடுதல் மூலம் ஒலி மாசில்லா நகரத்தை உருவாக்கலாம்.
* ஒலி மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Tags :
× RELATED இந்தியாவின் தேசிய விலங்கு ராயல் வங்க...