* தடுத்து பாதுகாப்பது மனிதர்களின் கடமை
காலையில் எழும்முன் நம் காதுகளில் ஒலிக்கும் பறவைகளின் இனிய ராகம் அன்றைய நாள்தனை உற்சாகமாக கழிக்க உதவுகிறது. மலர்களில் தேனை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சி முதல், வைக்கும் சோற்றை சாப்பிட வரும் காகம், குருவி வரை நாம் ரசிக்கும் பறவைகள் அநேகம். ‘பறவைகள் பலவிதம். தங்குமிடம் தனிவிதம். கவிதைகள் பலவிதம்! ரசிப்பதும் தனிவிதம். பறவைகள் படுக்க இடம் இல்லாமல் மரங்களை அழித்துவிட்ட அரக்கர்களே மனிதர்கள். இயற்கையோடு வாழும் பறவைகளை நினைத்து பாவெழுதி என்ன பயன்? பாவம் பலவித பறவைகள் பறந்து அலைகின்றன இருக்க இடமின்றி. வீடுகள், வீதிகள், காடுகளில் மரங்கள் இல்லை. கவிதையில் மட்டும் ரசிப்பேன்? உலகில் சிறகுகள் உள்ள உயிரினங்கள் பறவைகள் மட்டுமே.
அவற்றின் சிறகுகள் மனிதர்களின் முடி மற்றும் நகங்களில் உள்ள கெரோட்டின் பொருளால் ஆனது. மனிதர்களின் புஜங்களில் உள்ள அதே எலும்புகளின் அமைப்பில்தான் பறவைகளின் இறக்கைகளும் உள்ளன. ஆனால், அவற்றின் அமைப்புதான் வித்தியாசமானவை. பறவையின் சில எலும்புகள் உள்ளீடற்றவை. அதனாலேயே அவற்றால் காற்றில் பறக்க முடிகிறது. உலகில் 9 ஆயிரத்து 800 வகை பறவை இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளை போல வெப்ப ரத்தமுடையவை. ஆனால் ஊர்வன போன்று முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தனித்துவமான உயிரினங்கள். பறத்தலுக்கான சிறப்பான உடலமைப்பும், இயற்கையை சமநிலையில் வைத்திருக்க உதவும் முக்கிய பங்கும் இவற்றின் தனித்தன்மைகள்.
பறவை இனங்களிலேயே மிகச்சிறியது ஓசனிச்சிட்டு. இது தேன்சிட்டை போலவே, அந்தரத்தில் இறக்கையை அடித்து கொண்டே, ஒரு செடியில் உள்ள பூவில் இருந்து தேனை குடிக்கும். தென் அமெரிக்க நாடுகளில் வாழும் இப்பறவை 1.80 கிராம், 5 செ.மீ நீளம் கொண்டது. 2.50 அங்குலம் உள்ள ஓசனிச்சிட்டு முதல் 9 அடி உயரம், 156 கிலோ எடை, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் ஓடக்கூடிய தீக்கோழி வரை பல்வேறு பறவையினங்கள் இப்புவியில் காணப்படுகின்றன. வீட்டருகில் உள்ள மரம், ஓடை, ஏரி , குளம், கடல், மலை, குன்று என எல்லா இடங்களிலும், கருப்பு, சிவப்பு, சிறியவை, பெரியவை என எந்த வேறுபாடும் இல்லாமல் பல பறவைகளை நம்மால் பார்க்க முடியும்.
வாழும் சூழல், வடிவம் மற்றும் உணவு பழக்கத்தின் அடிப்படையிலும் பறவைகள் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பறவைகளில் சைவம், அசைவம், அனைத்துண்ணிகள் என உள்ளன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால், பறவைகளால் உடலில் உணவை சேமித்து வைக்க இயலாது. இதனால் பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை உணவு தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. பூச்சி உண்பவை, மகரந்த சேர்க்கைக்கு உதவுபவை, பழங்கள், விதைகளை சாப்பிடுபவை, வேட்டையாடி உண்பவை என பறவைகளில்தாம் எத்தனை விதம். பறவைகளுக்கு மட்டுமே உடலை மூடிய இறகுகள் உள்ளன. இவை பறப்பதற்கும், உடலின் வெப்பநிலையை காப்பதற்கும் உதவுகின்றன.
இவற்றின் எலும்புகள் மிக மெலிதாக, உள்ளே காற்றறைகளுடன் இருப்பதால் எடை குறைவாக, எளிதாக பறக்க உதவுகின்றன. பறவைகளுக்கு பற்கள் கிடையா. ஆனால், உணவை கொத்தி (உடைத்து) தின்ன உறுதியான அலகுகள் உள்ளன. முன்னங்கால்கள் 2ம் இறக்கைகளாக மாறியுள்ளன. நடக்கவும், மரக்கிளைகளை பற்றிக்கொள்ளவும் 2 கால்கள் மட்டுமே உள்ளன. பறக்கும்போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், தொடர்ச்சியான ஆக்சிஜனை பெற ஏதுவாக, இவற்றின் நுரையீரல்களுடன் காற்றுப்பைகளும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. பறவைகள் நட்சத்திரங்கள், புவிவிசை போன்றவற்றை கொண்டு, தண்ணீர், இரை, இனப்பெருக்கத்துக்காக வலசை செல்கின்றன.
மிசிசிப்பி – அமெரிக்கா, பசிபிக் – அமெரிக்கா, அட்லாண்டிக் – அமெரிக்கா, கருங்கடல், மத்திய ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா – மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா என, பறவை வலசை வழித்தடங்கள் 7 உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ‘பேருள்ளான்’ பறவை அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்து வரை 9 நாட்கள் 17 ஆயிரத்து 460 கி.மீ வலசை செல்கின்றன. இப்படி கண்டம்விட்டு கண்டம், நாடுவிட்டு நாடு, மாநிலம்விட்டு மாநிலம் என வலசை செல்லும் பறவைகள் பல உள்ளன. பலவகையான பழங்களை தின்று விதைகளை பரப்புவதன் மூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு பறவைகள் உதவுகின்றன. பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளை பறவைகள் இரையாக்கி கொள்வதால் விளைச்சல் அதிகரிக்கிறது.
பறவை எச்சத்தின் சுண்ணாம்பு சத்து பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கின்றன. இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்படுகிறது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிவதில் பறவைகள் மனிதனுக்கு முன்னோடிகள். குளங்கள், குட்டைகள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள், கடற்கரை போன்ற பகுதிகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நீராதாரம், விவசாயம் செழிப்பாக உள்ளது எனலாம். நீர்வாழ் பறவைகளின் எண்ணிக்கையை வைத்தே அப்பகுதியின் உயிர்ச்சூழல் எனப்படும் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பின் செழுமையை கண்டறிய முடியும்.
சைபீரியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மங்கோலியா, சீனா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்து பல்வேறு பறவைகள் இந்தியாவுக்கு வலசை வருகின்றன. இப்படி தமிழகம் வரும் பறவைகளில் பாதிக்குமேல் திரும்பி செல்வதில்லை. இவற்றை சிலர் வேட்டையாடி தங்களுக்கு விருந்தாக்கி விடுகின்றனர். மேலும் அவை தங்கும் குளங்களை பிளாஸ்டிக் போன்ற குப்பைகளாலும், வேதிபொருட்கள் கலந்த கழிவுகளாலும் மாசுபடுத்தி வருவதால் அவை உயிரிழக்கின்றன. விருந்துக்கு வீட்டுக்கு வருபவர்களை விஷம் வைத்து கொல்வது நியாயமா?
இதுபோல, பெருங்கடல் நீரோட்டம், காற்றின் தன்மை, உணவு இருக்கும் அளவு, அளவுக்கு அதிகமான வெப்பம் அல்லது குளிர், காலம் மாறிய மழை பொழிவு என பறவைகளின் வலசை கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னதாக ஆரம்பித்து காலம் கடந்து முடிவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
‘பறவைகள் எல்லாம் சுதந்திரமா, எங்க வேண்டுமானாலும் போகலாம்; என்ன வேணாலும் சாப்பிடலாம்னு’ கருத்து இருந்து வருது. ஆனால், அகங்கார, ஆறறிவு கொண்ட மனிதன் பறவைகளோட வாழ்விடங்களை அழித்து வருகின்றான். இருக்கும் ஏரி , குளம், ஆறுகளை மாசாக்கி, விளைநிலங்களுக்கு வேதியியல் உரம், பூச்சி கொல்லி மருந்து கலந்து, கனிமவளங்களை அளவுக்கு மீறி எடுத்து, கடலில் குப்பைகளை கொட்டி, காற்று மாசு, புவி வெப்பமயமாதல் என காலநிலை மாற்றங்களை கொண்டு வந்து, பறவைகளை வேட்டையாடி நம்மால் என்னென்ன அட்டூழியம் செய்ய முடியுமோ, அவற்றை எல்லாம் பண்ணி முடிச்சிட்டோம்; பறவைகளுக்கான அடிப்படை உரிமையை பறித்து விட்டோம்.
‘காக்கை, குருவி எங்கள் சாதி’ என்றான் பாரதி. மனிதர்கள் இல்லா உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். மனிதர்கள் கிளிப்பேச்சு கேட்கவும், குயிலிசையில் கிறங்கவும், மயிலசைவில் மயங்கவும், இயற்கை பறவைகளை படைக்கவில்லை! ஆனால் பறவைகள் இல்லா உலகில் மனிதர்களால் வாழ முடியாது. எனவே பசுமையை போல பறவைகளையும் பரவ செய்வோம்! நீர்நிலைகள், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது, மரங்களை வளர்ப்பது, வேட்டையாடுவதை தடுப்பது என நாம் நினைத்தால் பறவைகளை பாதுகாக்க முடியும். பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், அழிந்து வரும் பறவை இனங்களை கண்டறிந்து மீதம் உள்ளவற்றை காப்பாற்றியும், பறவைகளுக்கான வாழ்விடத்தை நாம் அழித்து விடாமலும் இருப்பதுதான் இக்காலத்துக்கு மிகமிக அவசியம்.
நம்மை அண்டிவரும் பறவைகளை துன்புறுத்தாமல், அவற்றின் சிறப்புகளை நம் பிள்ளைகளுக்கு எடுத்து கூறி, அவற்றை பாதுகாத்திட வேண்டும். இது நம் தலைமுறையியினரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
பறவைகள் பேசுமா?
எல்லா உயிரினங்களும் தங்கள் செய்கைகள், ஒலியெழுப்புதல், அசைவு போன்றவை மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. பறவைகள் இயற்கையின் மாற்றங்கள், ஏற்படப்போகும் சீற்றங்கள் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கையாக அவை இடம்பெயர தொடங்குகின்றன. எதிரிகளால்வரும் அச்சுறுத்தல்கள், இனப்பெருக்க கால அறிவிப்புகள், மகிழ்ச்சி, சோகம், துக்கம் மற்றும் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும்போது பறவைகள் ஒலியெழுப்பி அறிவிக்கின்றன. இனிமையாக பாடும் பறவைகளும் உள்ளன.
பறவைகளின் குரல் மூளையில் இருந்து வரும் சமிஞ்ஞைகளால் உருவாகிறது. பறவைகளுக்கு தொண்டையின் குரல்வளை – காற்றுக்குழாய் பிரியும் இடத்தில் அமைந்துள்ள தனித்துவமான ‘சிரின்க்ஸ் (Syrinx)’ என்ற உறுப்பு ஒலியெழுப்ப உதவுகிறது. இதுபோல, பறவைகளின் உடலின் வாலுக்கு சற்று மேல்பகுதியில் எண்ணெய் சுரப்பி உள்ளது. இதில் இருந்து எண்ணெயை அலகால் எடுத்து, இறகில் தடவி கொள்கின்றன. இதன்மூலம் இறகுகளில் நீர் ஒட்டாமல் சுத்தமாக இருப்பதோடு, உடல் வெப்பநிலையும் பாதுகாக்கப்படுகிறது.
அடைகாக்கா பறவைகள்?
பெரும்பாலான பறவைகள் அடைகாக்கின்றன. ஆனால் சில அடைகாப்பதில்லை. ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகளில் உள்ள ‘ஸ்கரப் ஃபவுல்’ பறவைகள் புற்கள், இலைகள், மண் துகள்களை ஒன்று சேர்த்து 15 அடி உயரம், 35 அடி பரப்பளவு கொண்ட குவியலை உருவாக்குகின்றன. அதில் 3 அடி நீளம் உள்ள குழிகளை உருவாக்கி முட்டைகளை இடுகின்றன. குவியலுக்குள் கிடைக்கும் வெப்பத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. குயில் போன்றவை வேறு பறவைகளின் கூட்டில் முட்டை இட்டு சென்று விடுகின்றன.
வித்தைகள் பல
1. பையா எனும் பறவை மனிதனை போல் விசிலடிக்கும்.
2. பெங்குவின் நீருக்கடியில் நீந்தும் திறனுடையது.
3. கிவி எனும் பறவைக்கு வயிற்றில் பல் உள்ளது.
4. நெருப்புக்கோழி கற்களை தின்னும் திறனுடையது.
5. வாத்து ஒருகண் பார்வை திறனுடையது.
8. ஆந்தை தனது கழுத்தை வட்டமாக சுழற்றும் தன்மையுடையது.
7. பிட்டா எனும் பறவை 9 வண்ணங்களை உடையது.
8. ‘ஆண்டியன் காண்டர்’ பறவை சிறகடிக்காமல் வெகுதூரம் பறக்கும்.
9. பால்கன் எனும் பறவை வெகுதூரத்துக்கு பறக்கும் திறனுடையது.
10. ‘ரோட் ரன்னர்’ பறவை சாலைகளில் ஓடும் திறனுடையது.
11. சாண்ட் கிரவுஸ் பறவையின் வயிற்றில் நீரை உறுஞ்சும் இறக்கைகள் உள்ளன.
12. ஹம்மிங் பறவை பின்னோக்கி பறக்கும் திறனுடையது.
13. ஸ்பின் டைல்ட் ஸ்விப்ட் பறவை அதிவேகத்தில் பறக்கும்.
14. பாரடைஸ் மிக அழகான இறக்கைகளை கொண்டுள்ளது.
15. லெம்மாஸீர் வல்சர் எலும்பை உடைக்கும் வல்லமை கொண்டது.
16. புறா ஒய்வெடுக்காமல் 1,000 கி.மீ வரை பறக்கும் திறனுடையது.
