×

42 ஆண்டுகளாக இயங்கிய காற்றாலை, சோலார் மின்வாரிய ஆபீஸ்கள் மூடல்: 21,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி பாதிப்பு: அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு: மின்வெட்டு ஏற்படும் அபாயம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனம் ஆகிய 3 துணை நிறுவனங்களும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்திற்கு மட்டும் தனியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு அவரது கீழ் தமிழகம் முழுவதும் காற்றாலைகள் மற்றும் சூரிய மின் சக்தி திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மத்திய மின் துறை வெளியிட்ட சமீபத்திய பட்டியலில், நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதலிடத்திலும், சூரியசக்தி மின் உற்பத்தித் திறனில், 4வது இடத்திலும் உள்ளது. இதில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் கீழ் சென்னையில் ஒரு மரபுசாரா எரிசக்தி தலைமை பொறியாளர் அலுவலகமும் நெல்லை, உடுமலைப்பேட்டையில் தலா ஒரு மரபுசாரா எரிசக்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், உடுமலை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில், 12 ஆயிரம் மெகா வாட் திறனுடைய காற்றாலைகளை தனியார் நிறுவனங்கள் நிறுவியுள்ளன. ஆண்டுதோறும், மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி ‘சீசன்’ காலமாகும். தமிழகத்தில் உபயோகிக்கப்படும் மின்சாரத்தில், மூன்றில் இரண்டு பங்கு தேவையை, காற்றாலைகளும் சூரிய மின் சக்தியும் பூர்த்தி செய்கின்றன.

நெல்லை மரபுசாரா எரிசக்தி அலுவலகம் 1985ல் தமிழகத்திலேயே முதல்முறையாக காற்றாலை மூலம் மின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்டது. தமிழகத்திலேயே அதிக காற்றாலைகள் உள்ள பகுதியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் நெல்லை மரபு சாரா எரிசக்தி வட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தனியார் பங்களிப்புடன் ஆண்டுக்கு சுமார் 1000 மெகாவாட் வரை சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தை ஓட்டப்பிடாரம், மானூர் கானார்பட்டி, திருச்சி, கயத்தாறு, அய்யனார் ஊத்து, காரைக்குடி போன்ற துணை மின் நிலையம் வழியாக வட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல ஆண்டிப்பட்டி கணவாய் மற்றும் பாலக்காடு கணவாய் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி கேந்திரமாகும். இதற்காக தேனி மாவட்டத்தில் துவங்கி கோவை மாவட்டம் வரை வீசும் காற்றை பயன்படுத்தி உடுமலைப்பேட்டையை மையமாக வைத்து 2002ல் புதிதாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தியை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைத்து அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல் ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் சூரிய மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமும் ஆண்டுக்கு சரியாக 500 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மேற்கு மாவட்டங்களுக்கும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. இதுதவிர சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பகலில் பேட்டரி மூலம் சேமித்து, மாலை நேரங்களில் குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விநியோகிக்கும் வகையில் சுமார் 1000 ‘Mwhr BESS’ திட்டம் தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், காரைக்குடி, மானூர் அருகே கானார்பட்டி, கயத்தாறு ஆகிய பகுதிகளில் நெல்லை வட்ட அலுவலகம் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

நெல்லை, உடுமலைப்பேட்டை மரபுசாரா எரிசக்தி அலுவலகங்கள் மூலம் தடையில்லாமல் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் 21 ஆயிரம் மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 1ம் தேதி மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடந்த துறை சார்ந்த கூட்டத்தில் நெல்லை, உடுமலைப்பேட்டை மரபுசாரா எரிசக்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதிய காற்றாலைகள், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி அடியோடு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தி அமைப்பினர் கூறுகையில், ‘‘மரபு சாரா எரிசக்திக்கு உரிய பிரத்யேக அலுவலகங்களை அகற்றி விட்டு விநியோகம், செயலாக்கம் போன்ற துறையில் இணைத்தால் அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவுடன் கூடுதல் பளு ஏற்பட்டு தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.

இதன் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதில் நீண்ட கால சுணக்கம் ஏற்படும்’’ என்றனர். முதல்வர் விஜய் கடந்த மாதம் 10ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற போது இங்கு ஒரே ‘பவர்’ சென்டர் தான் என சினிமாவில் டயலாக் பேசுவது போல கூறினார்.

அதற்காக தான் இந்த அலுவலகங்களை மூடி விட்டு ஒரே பவர் சென்டரை உருவாக்கப் போகிறாரா, இதன் பின் விளைவு என்ன, மின்சாரம் என்பது பொதுமக்களின் அடிப்படை தேவையே, ஏற்கெனவே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற முடிவு சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

* ரூ.500 கோடி வருவாய் ‘அம்போ
’காற்றாலைகள் அமைக்கும் போது அதன் அருகில் அமைக்கப்படும் மற்றொரு காற்றாலை எவ்வளவு தூரத்தில் அமைக்க வேண்டும், குடியிருப்பு, பள்ளிகள், நெடுஞ்சாலை, விமான நிலையம் ஆகிய பகுதியில் இருந்து எவ்வளவு தூரத்தில் அமைக்க வேண்டும், காற்றாலைகள், சூரிய மின்சக்தியை தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையங்களில் இணைப்பதற்கு தொழில்நுட்ப சாத்திய கூறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து விரைந்து சேவை வழங்குவதற்காக தான் நெல்லையிலும், உடுமலைப்பேட்டையிலும் இரண்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. நெல்லை, உடுமலைப்பேட்டை அலுவலகம் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்திற்கு கிடைக்கிறது.

* தமிழ்நாடு பின்தங்கும் ஒன்றிய அரசின் கை ஓங்கும்
ஒன்றிய அரசு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் காற்று இருப்பது குறித்து ஆராயும் ‘Centre of Wind Energy Technology’ என்ற அமைப்பை நிறுவி உள்ளது. இந்த நிறுவனம் எங்கு காற்றாலைகள் நிறுவலாம் என ஆராய்ச்சி செய்து தனியார் காற்றாலைகளை நிறுவி அந்த மின்சாரத்தை பெற்று மத்திய மின் தொகுப்பிற்கு கொண்டு செல்லும்.

ஏற்கனவே தமிழக பகுதிகளில் வீசும் காற்று மூலம் காற்றாலைகள் அமைத்து 4 ஆயிரம் மெகாவாட் மத்திய மின் தொகுப்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக எட்டயபுரம், வடக்கு வண்டானத்தில் தலா 400 கிலோவாட் மின் தொகுப்பை ஒன்றிய அரசு நிறுவி உள்ளது, தமிழகத்தில் நெல்லை, உடுமலைப்பேட்டை யூனிட்டுகளை மூடும் போது தமிழகம் மின் உற்பத்தியில் பின்தங்கும். அப்போது ஒன்றிய அரசின் கை ஓங்கி விடும்.

* 25 ஆண்டு காற்றாலைகளுக்கு சிக்கல்
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை, 11,156 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 9,335 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். இதே போல 2,581 சோலார் யூனிட்டுகள் மூலம் 11,864 மெகாவாட் என மொத்தம் 21,199 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். மே முதல் செப்டம்பர் வரை காற்று வீசும் காலம். இதே போல சோலார் மின் உற்பத்தி வெயில் காலங்களில் 90 சதவீதம் நடைபெறும். கோடை காலங்களில் 5 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேல் மின் தேவை காற்றாலை, சோலார் மூலமே ஈடுகட்டப்படுகிறது.

இந்த இரு அலுவலகங்களையும் மூடுவதால் இனி காற்றாலை, சோலார் மூலம் மின்உற்பத்தி தாமதமாகும். 25 ஆண்டுகள் முடிந்த காற்றாலைகளை புதுப்பிப்பதில் காலதாமதம் ஏற்படும். இதனால் பல ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும். தற்போது 300 மெகாவாட் காற்றாலைகள், சோலார் உற்பத்தியை துவங்க விண்ணப்பித்துள்ள போதிலும், அலுவலகங்களை மூடும் உத்தரவு காரணமாக அனுமதி வழங்குவதில் தாமதம் நிலவி வருகிறது.

Tags : Tamil Nadu Electricity Board ,Tamil Nadu Power Generation Corporation ,Tamil Nadu Electricity Distribution Corporation ,Tamil Nadu Green Energy Corporation ,Tamil Nadu Power Transmission Corporation ,Tamil Nadu Green… ,
× RELATED இந்தியாவின் தேசிய விலங்கு ராயல் வங்க...