புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு ஒன்றிய உள்துறை அனுமதி கிடைக்காதது ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

 

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காதது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி மே 13ம்தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களாக பாஜக நமச்சிவாயம், என்.ஆர். காங்கிரஸ் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கான இலாகா இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் உள்பட 6 அமைச்சர்கள் பதவி உள்ளன. இதில் மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்களும், பாஜகவுக்கு ஒரு அமைச்சர் எனவும் தேர்தலுக்கு முந்தைய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமைச்சர் பதவியை பெற 2 கட்சி எம்எல்ஏக்களிடம் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 3ம்தேதி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, புதிய அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார். இதில் ஜிஎன்எஸ் ராஜசேகரன் (பாஜ), ராஜவேலு (என்ஆர் காங்.) ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க பரிந்துரை செய்தார்.

அந்த கடிதத்தை கவர்னர் கைலாஷ்நாதன், குடியரசு தலைவரின் அனுப்பி வைத்தார். குடியரசு தலைவரின் அனுமதி கிடைத்தவுடன் நேற்று பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பட்டியலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்காததற்கு காரணம் பாஜகவின் நெருக்கடிதான் என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

புதுவையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவியை ஒதுக்கித் தரவேண்டுமென அந்த கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் முதல்வர் ரங்கசாமிக்கு, சபாநாயகர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்க மனமில்லாத நிலையில், துணை சபாநாயகர் பதவியை வேண்டுமெனில் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதேபோல் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 2 நியமன எம்எல்ஏக்கள் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது திரிபுரா மற்றும் குஜராத் மாநிலங்களுங்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதனால் புதுச்சேரி கவர்னர் அனுப்பி வைத்த புதிய அமைச்சர்களுக்கான ஒப்புதல் கோப்பானது இன்னும் குடியரசு தலைவரின் மாளிகைக்கு அனுப்பப்படாமல், உள்துறை அமைச்சகத்திலேயே முடங்கி கிடப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி திரும்பியதும் இந்த கோப்பை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கும்பட்சத்தில், வருகிற 11ம்தேதி புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் பாஜகவின் சில முக்கிய கோரிக்கைகளை ரங்கசாமி பிடிகொடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும், இல்லாவிடில் அமைச்சர் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்தாலும் இலாகா ஒதுக்கீட்டில் அடுத்தகட்ட இழுபறி நீடிக்கும், நியமன எம்எல்ஏ விவகாரமும் தேஜ அணிக்குள் பூதாகரமாகும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வருகிற 11ம்தேதி நிதி அயோக் கூட்டம் நடக்கறது. வழக்கமாக இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்வதில்லை.

தற்போது இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை. நிதி அயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணிக்கும்பட்சத்தில் அன்றைய தினம் அமைச்சர்கள் பதவியேற்பு விழா சாத்தியமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.

Related Stories: