×

மீன்பிடி தடைகாலத்தில் கை கொடுக்கும் நண்டு தினசரி ரூ.300 வருமானம் ஈட்டும் மீனவ பெண்கள்

 

சாயல்குடி: மீன்பிடி தடைகாலத்தில் கடற்கரையில் நண்டு பிடித்து மீனவ பெண்கள் தினசரி ரூ.300 வருமானம் ஈட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ரோச்மாநகர், மூக்கையூர், மாரியூர், ஒப்பிலான், கீழமுந்தல், மேலமுந்தல், வாலிநோக்கம், ஏர்வாடி வரை 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கீழமுந்தல், மாரியூர், மூக்கையூர், வாலிநோக்கம் கடல்களில் வல்லம், நாட்டுபடகு, விசைபடகுகளில் சென்றும், கரைவலை விரித்தும் மீன்பிடித்து வருகின்றனர்.

வலையிலிருந்து மீன்களை எடுத்தல், ஏலக்கூடத்திற்கு கொண்டு வருதல், வலையை சீரமைத்தல், மீன்களை உலர வைத்து கருவாடு ஆக்குதல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்களுக்கு துணையாக மீனவ பெண்களும் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மன்னார்வளைகுடா கடல் பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் கரையிலிருந்து குறைந்த நாட்டிக்கல் மைல் துாரத்திற்கு வரையறுக்கப்பட்ட எல்லையில் நாட்டு படகுகளில் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இதனால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்தது. இந்தநிலையில், இப்பகுதி கடற்கரைகளில் அதிகாலை, காலை, இரவு நேரத்தில் கடல் அலையில் மிதந்து வரும் நண்டுகள் கடற்கரை மணலில் குழிதோண்டி பதுங்கி கொள்ளும். இதனை இப்பகுதி பெண்கள் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து மாரியூர் பெண்கள் கூறுகையில், ‘தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் பெரும்பாலும் கடற்கரையில் வேலை இல்லை.

இதனால் காலை, மாலை நேரங்களில் நண்டு பிடித்து வருகிறோம். நாள் ஒன்றிற்கு 1 முதல் 2 கிலோ வரை மட்டுமே நண்டு பிடிக்க முடியும். சளி, இருமல், இளைப்பு நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியோர் நோய் எதிர்ப்பு சக்திக்காக சமைத்து சாப்பிட வாங்கி செல்வார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது’ என்றனர்.

Tags : Sayalkudi ,Kannrajapuram ,Rochmanagar ,Mokkaiur ,Mariur ,Oppilan ,Kalamundal ,Alamundal ,Valinokkam ,Airwadi ,Ramanathapuram ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர்,...