×

போதை மாத்திரைகள் சப்ளை; ராசிபுரத்தில் 2 மருந்துகடைகளுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

 

சேலம்: சேலத்தில் 1.39 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதனை சப்ளை செய்த ராசிபுரத்தில் உள்ள 2 மொத்த மருந்துகடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் தாதகாப்பட்டி மேட்டுத்தெரு பகுதியில் வலி நிவாரண மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அன்னதானப்பட்டி போலீசார் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மேட்டுத்தெருவை சேர்ந்த மேகலா(48), ராசிபுரத்தை சேர்ந்த முகமது வதூத் ஆகியோர் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சத்து 39ஆயிரத்து 130 போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள், 6400 ஊசி மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேகலாவின் கணவர் கண்ணன், ராசிபுரத்தில் உள்ள மொத்த வியாபார மருந்து நிறுவனத்தில் வேலைசெய்து வந்ததும், அந்த நிறுவனத்தில் இருந்து மொத்தமாக போதை தர கூடிய வலி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கண்ணன் உள்பட 6 பேரை தாரமங்கலம் போலீசார் ஏற்கனவே போதை மாத்திரை விற்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த சேலம் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரித்தனர். அதில், ராசிபுரத்தில் உள்ள 2 மொத்த வியாபார மருந்து நிறுவனத்தில் இருந்து போதை தர கூடிய வலி மாத்திரை விதிமுறையை மீறி மொத்தமாக விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை மாத்திரைகள் மொத்தமாக சப்ளை செய்த அந்த 2 மருந்து நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், லைசென்சை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Rasipuram ,Salem ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர்,...