போரூர், ஜூன் 8: மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் அவரது தரப்பினர் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் உபயோகப்படுத்தி வந்த இடம் வேறு ஒரு நபரின் பெயரில் பட்டா கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மோகன்ராஜ் மற்றும் சதாசிவம் ஆகியோர் நேற்று கோவூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாருக்கும், மோகன்ராஜ் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் தரப்பினர், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வகுமார் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தாக்கிய கோவூரை சேர்ந்த சதாசிவம் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோகன் ராஜ் தரப்பினர் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் தங்களை தாக்கியதாகவும் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.பட்டா வழங்கியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
