- மார்க்சிஸ்ட்
- இந்தியா கூட்டணி
- தில்லி
- காங்கிரஸ்
- பாஜக
- புது தில்லி
- மார்க்சிஸ்ட் கட்சி
- ராஜ்ய சபா
- ஜான் பிரிட்டாஸ்
- இந்தியா...
புதுடெல்லி: பாஜவுடன் கூட்டு குறித்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலளிக்காததால் அதிருப்தியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி, டெல்லியில் இன்று நடக்க உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு தங்கள் பிரதிநிதியாக மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸை அனுப்ப திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்க உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதல் முறையாக இக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறி துரோகம் செய்ததால், கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், காங்கிரசுடன் மனஸ்தாபத்தில் இருக்கும் மார்க்சிஸ்ட், தங்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸை நியமித்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கேரளாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் பின், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தை கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், ‘‘கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜவுடன் மார்க்சிஸ்ட் கூட்டு வைத்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை காங்கிரசின் மேலிட தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற தலைவர்களே முன்வைத்தனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் இந்தியா கூட்டணியின் அடிப்படையாக விளங்கும் ஒத்துழைப்பு உணர்வுக்கு முரணானவை. எனவே இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் விளக்கம் தர வேண்டும்’’ என எம்.ஏ.பேபி கூறியிருந்தார். ஆனால் இதுவரை இந்த கடிதத்திற்கு காங்கிரஸ் பதிலளிக்கவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கட்சி இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதிநிதியை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 எதிர்க்கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் மற்ற கட்சிகள் வெவ்வேறு பணிகள் காரணமாக பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பாஜ கேள்வி
பாஜ செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘‘குறிக்கோள் இல்லை, தொலைநோக்கு பார்வை இல்லை, குழப்பம், பிளவு, குற்றச்சாட்டுகள், பதவி ஆசை, இதுதான் இந்தியா கூட்டணியின் உண்மையான நிலை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியும் பங்கேற்காமல் விலகி இருக்கக் கூடும். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரசுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மோதிக் கொண்டிருக்கிறது. காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு மார்க்சிஸ்ட் கடிதம் எழுதுகிறது. எனவே நாட்டில் எங்கேயும் இந்தியா கூட்டணி இல்லை. அது வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது’’ என்றார்.
