- காங்கிரஸ்
- பிரதமர் மோடி
- சிபிஎஸ்இ
- புது தில்லி
- திக்விஜய் சிங்
- மோடி
- கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு
புதுடெல்லி: சிபிஎஸ்இ 9ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாய மும்மொழி திட்டம் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி திக்விஜய்சிங் கடிதம் எழுதியுள்ளார். கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைருமான திக்விஜய்சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வியாண்டின் இடையில் மும்மொழி திட்டத்தை கட்டாயமாக்குவதை எதிர்த்து சிபிஎஸ்இ 9ம் வகுப்பு பயலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவிடம் இருந்து கோரிக்கை மனு வந்துள்ளது. அந்த மனுவை இத்துடன் இணைத்து அனுப்புகிறேன். அந்த மனுவை பார்த்ததில், அதில் எழுப்பப்பட்டுள்ள கவலைகள் நியாயமானவை என்று நான் கருதுகிறேன். போதுமான ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள், மாற்றத்துக்கான கால அவகாசம் இன்றி கல்வியாண்டின் இடையில் திடீரென இத்திட்டத்தை அமல்படுத்துவது கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தும். மொழிகளுக்கான பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி வெளியிடும் வரை பள்ளிகள் மொழிகள் தொடர்பான தற்போதைய பாடத்திட்ட முறையையே பின்பற்ற வேண்டும் என்ற பாடத்திட்டக் குழுவின் பரிந்துரையை கடந்த டிசம்பர் 2025ல் சிபிஎஸ்இ நிர்வாகக் குழு அங்கீகரித்திருந்தது.
தனது சொந்த நிர்வாகக் குழுவின் முடிவுக்கு மாறாக 2026 ஜூலை 1 முதல் 9ம் வகுப்பில் மூன்றாம் மொழி பயிற்சியை அமல்படுத்துமாறு சிபிஎஸ்இ 15ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது. என்சிஇஆர்டி இதுவரை மொழிகளுக்கான தரப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிடாத நிலையில் சிபிஎஸ்இ இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இந்தி மொழி அல்லாத தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கொள்கை அமலாக்கத்தை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
