×

கேரளம் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழப்பு

 

கேரளம்: கேரளம் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மரங்கள் முறிந்து விழுதல், சுவர் இடிந்து விழுதல் மற்றும் ஆற்றில் மூழ்குதல் போன்ற சம்பவங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், இதுவரை பல்வேறு விபத்துகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்தது, வாகன விபத்துகள் மற்றும் மின் விபத்துகளில் சிக்கி இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் நூலிழையில் மாணவர்கள் உயிர்தப்பினர்.

திருச்சூர் மாவட்டம் மணலூரில், தற்காலிகக் கொட்டகை மீது மரம் விழுந்ததில், அதன் கீழ் உறங்கிக் கொண்டிருந்த 29 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கோழிக்கோட்டில் உள்ள குட்டியாடி ஆற்றில் ரம்யா (36) என்றப் பெண்ணும், அவரது ஏழு வயது மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

துணி துவைக்க சென்றபோது தண்ணீரில் வழுக்கி விழுந்த மகனை காப்பாற்ற, ரம்யாவும் குதித்த நிலையில், இருவரும் ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். காசர்கோடு மாவட்டம் ஆதூர் அருகே சஞ்சக்கடவு என்ற இடத்தில் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், சகோதரர்கள் முசம்மில் (14), (முன்சிர்) ஆகியோர் உயிரிழந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள பட்டிமட்டம் குளத்தில் நபீல் ( 21) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கேரளாவில் ஜூன் 10 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய பரவலான மழை மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags : Kerala ,
× RELATED அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோர்...