×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு: விஜய் தொகுதி உள்பட பல இடங்களில் மக்கள் மறியல்

சென்னை: சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டுவருவதால் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல், மின்சார வாரிய அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விஜய்யின் சொந்த தொகுதியிலும் நேற்றிரவு தொடர்ந்து மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் சாலை மறியல் நடத்தினர். தொடர் மின்வெட்டு மக்களிடம் பெரும் கோபத்தையும் இந்த அரசு மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். விஜய்யின் பெரம்பூர் தொகுதியிலும் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மின்வெட்டு பிரச்னைகளை தீர்க்கக்கோரி சாலை மறியல், மின்வாரிய அலுவலகம் முற்றுகை உள்பட பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி புதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 2 மணி வரை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் வந்து சர்மா நகர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் நடந்து அடுத்த 2 தினங்களுக்குள் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், ஜெ.ஜெ.நகர் 1வது தெரு மற்றும் 2வது தெரு ஆகிய இடங்களில் நேற்றிரவு 8 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. விட்டுவிட்டு பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வியாசர்பாடி போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.‘‘மின்சார வாரிய ஊழியர்களை வரவழைத்து உடனடியாக மின்சார பிரச்னையை தீர்த்து வைக்கிறோம்’ என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘‘வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தால் அவர்கள் வந்து பீஸ் போய்விட்டது என்று பழுதை சரிசெய்து விட்டு செல்கின்றனர். அவர்கள் சென்றபின்னர் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் மின்தடை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. வேலைக்கு சென்றுவிட்டு வருகின்றவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான நபர்கள் வீட்டின் வெளியே உறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் தொகுதி என்று கூறுகிறார்கள். ஆனால் அடிப்படை விஷயங்களை கூட செய்துதர மறுக்கிறார்கள். எனவே மின்வெட்டு பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

இசிஆர்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் இரவு 8 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக கிழக்கு கடற்கரை சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கானத்தூர் போலீசார் வந்து மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தினர்.

இதுபற்றி அறிந்ததும் திருப்போரூர் தவெக எம்எல்ஏ விஜயராஜ் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு பேசி நடவடிக்கை எடுத்ததால் நள்ளிரவு 1 மணி அளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இசிஆர் கரிகாட்டுக்குப்பம் பகுதியில் நள்ளிரவு முதல் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டனர். இதுசம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் முட்டுக்காடு, கரிகாட்டு குப்பம் பகுதிகளில் மக்கள் நள்ளிரவில் சாலை மறியல் நடத்தினர். போலீசாரும் மின்சார வாரிய அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

திருவல்லிக்கேணி: சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.

கூடுவாஞ்சேரி: சென்னை நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்திநகர், டிபன்ஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 9 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கூடுவாஞ்சேரி சாலையோரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஆரணி: ஆரணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்கள், ஆரணி பஜார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ‘’ தினமும் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் எப்படி தூங்க முடியும்? மறுநாள் எழுந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ என்று மக்கள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Vijay ,Electricity Board ,
× RELATED பத்திரப் பதிவுத்துறையில் கடந்த...