- கல்வி அமைச்சர்
- NEET
- சிபிஎஸ்இ
- கரப்பான் பூச்சி விருந்து
- தில்லி
- புது தில்லி
- ஜந்தர் மந்தர்
- யூனியன்
- தர்மமேந்திர பிரதான்
புதுடெல்லி: தேர்வு முறைகேடு விவகாரத்தில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் முதல் முறையாக நேற்று நடந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தையொட்டி டெல்லி முழுவதும் துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி என விமர்சித்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் நையாண்டி குழுவாக கடந்த மாதம் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு (சிஜேபி) இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது. அரசியல் கட்சியாக உருவெடுக்காத இக்குழு, நீட், சிபிஎஸ்இ, கியூட், எஸ்எஸ்சி போன்ற தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை மையமாக வைத்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக தொடர்ந்து பிரசாரம் செய்கிறது. இக்குழுவின் நிறுவனர் அமெரிக்காவின் பாஸ்டனில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர் அபிஜித் தீப்கே, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 6ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாகவும் அதில் பங்கேற்க இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி போராட்டத்தில் பங்கேற்க, கரப்பான் பூச்சி கட்சி தொடங்கப்பட்ட பிறகு முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து அபிஜித் தீப்கே நேற்று காலை டெல்லி வந்தார். அவரது அழைப்பை ஏற்று ஏராளமான இளைஞர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் குவிந்தனர். பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் போராட்டத்தில் பங்கேற்றனர். சுட்டெரிக்கும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையில் பதாகைகளுடன் ஒன்றிய அரசுக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எதிராக கோஷமிட்டபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்ட களத்திற்கு வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே பேசியதாவது:
இது ஒரு நீண்ட போராட்டம். சமூக ஊடகங்களில் அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கத் தொடங்கி ஒருமாதம் ஆகிவிட்டது. ஆனால் வெட்கங்கெட்ட அவர்கள் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கரப்பான் பூச்சி கட்சியின் கணக்குகளை முடக்குவது, பதிவுகளை நீக்குவது போன்ற திசைதிருப்பும் செயல்களில் கவனம் செலுத்துகிறார்கள். நீங்கள் எங்கள் பதிவுகளை நீக்கலாம். ஆனால் இந்த இடத்திலிருந்து எங்களை அழிக்க முடியாது. என்னை சிறையில் அடைத்து விடுவார்களோ என என் தாய் அச்சப்படுகிறார். இந்த அரசுக்கு எதிராக குரலை எழுப்பும் ஒவ்வொரு குழந்தையின் அம்மாவும் இதே பயத்தை கொள்கிறார். இன்னும் எத்தனை காலம் இந்த பயத்துடன் வாழப் போகிறோம்? அவர்களிடம் சொல்லுங்கள். நாங்கள் பயப்படவில்லை. இங்கு, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக சுதந்திரமான வாழ்க்கையின் கடைசி தருணங்களை வாழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னை கைது செய்யவும் கூடவும். அதற்கு நான் தயாராகி விட்டேன். என் சுதந்திரத்தை தியாகம் செய்ய முழுமையாக தயாராகி விட்டேன்.
சிறைக்கு பயந்து பலரும் தங்களை சமரசப்படுத்திக் கொண்டார்கள், விலை போனார்கள். இந்த நாட்டின் மாணவர்களும், இளைஞர்களும் விலை போக மாட்டார்கள். இவ்வாறு அபிஜித் தீப்கே பேச அங்கு கூடியிருந்த மாணவர்கள் பலத்த கோஷத்துடன் வரவேற்பு கொடுத்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து டெல்லி முழுவதும் முக்கிய இடங்களில் துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஜந்தர் மந்தர் உட்பட பல பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டத்திற்கு மத்தியில் கரப்பான் பூச்சி கட்சியின் எக்ஸ் தளத்தில், ‘இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுங்கள். இல்லாவிட்டால் பதவி விலகுங்கள் கல்வி அமைச்சரே’ என பதிவு வெளியிடப்பட்டது. மாலை 3.30 மணி அளவில் அபிஜித் தீப்கேவுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு ெகாண்டு வரப்பட்டது.
பூக்களுடன் வந்த மாணவர்கள்
போராட்டத்திற்கு வரும் மாணவர்கள், இளைஞர்கள் ஒரு புத்தகத்தையும், தேசியக் கொடியையும் எடுத்து வருமாறு அபிஜித் தீப்கே எக்ஸ் தளத்தில் வலியுறுத்தி இருந்தார். அன்பு மற்றும் அமைதியுடன் போராட்டத்தை நடத்த கோரிக்கை விடுத்தார். கருணை, நன்றி உணர்வின் அடையாளமாக காவலர்களுக்கு பூக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படி, போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் கையில் பூ, புத்தகத்துடன் வந்திருந்தனர். பலர் கரப்பான் பூச்சி மாஸ்க் அணிந்திருந்தனர்.
ஜெய்ஸ்ரீராம் கோஷம்: 6 பேர் சிறைபிடிப்பு
போராட்டத்தின் போது, ஜந்தர் மந்தருக்கு அருகே கரப்பான் பூச்சி கட்சியின் எதிர்ப்பாளர்கள் என சிலர் திரண்டு போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி, கரப்பான் பூச்சி கட்சியினரை கடுமையாக வசைபாடினர். பாகிஸ்தானியர்கள், தேச துரோகிகள் என கடுமையாக விமர்சித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் 6 பேரை போலீசார் சிறைபிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
‘இளைஞர்கள் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்’
சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் செய்தியை பகிர்ந்தார். அதில், ‘‘இளைஞர்களே நாட்டின் எதிர்காலம். அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு நீதி மறுப்பதும், அவர்களை கரப்பான் பூச்சி என்று அழைப்பதும் முறையற்றது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. அதனாலேயே அவர்கள் போராடி வருகின்றனர். இளைஞர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். கரப்பான் பூச்சியை குறைத்து மதிப்பிடக் கூடாது. இது ஜந்தர் மந்தரில் போராடுபவர்கள் விடுக்கும் செய்தி’’ என்றார்.
‘சரியான மாற்றம் தேவை’ மாணவர்களின் கோபம்
நேற்று காலை முதலே மாணவர்கள் போராட்டத்திற்கு குவியத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் அளித்த பேட்டியில், தேர்வுகள் தொடர்பான தொடர் குளறுபடிகள், தேர்வு முடிவு குறித்த நிச்சயமற்ற தன்மை, அதிகாரிகள் பொறுப்பேற்க தவறுவது ஆகியவை கல்வி அமைப்பின் மீதான தங்கள் நம்பிக்கையை சிதைத்துள்ளதாக தெரிவித்தனர். இளைஞர்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு போதுமான கவனம் செலுத்த வில்லை என ஆளும் பாஜ மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.
தனது 3 மகள்களுடன் போராட்டத்தில் பங்கேற்ற நுஸ்ரத் பர்வீன், ‘‘போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தை நேரில் பார்த்தேன். என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதால் ஒரு பெற்றோராக நானும் கடும் அழுத்தத்தை உணர்கிறேன்’’ என்றார். கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் வழியாக மாறி விட்டதாக பட்டப்படிப்பு மாணவியான ரஸ்தா கூறினார். படித்து முடித்து பிறகு சரியான வேலை கிடைக்கவில்லை என்றும் அதற்கு ஆக்கப்பூர்வமான மாற்றம் தேவை என்றும் பல இளைஞர்கள் தெரிவித்தனர்.
