ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 6: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முனீஸ்வரன் தலைமை தாங்கினார். கட்சியின் நகர செயலாளர் மூர்த்தி, வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான ராமசாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜேந்திர சோழன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா துணை செயலாளர் செல்வம் மற்றும் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
