×

பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணி: எதிர்பார்ப்பில் பயணிகள்

ஊத்துக்கோட்டை, ஜூன் 6: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மாநகர பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பெரியபாளையம் அருகே அமணம்பாக்கம் ஊராட்சி தாமரைப்பாக்கம் பகுதியில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த ஊரை சுற்றி அமணம்பாக்கம், வெங்கல், மாகரல், புன்னப்பாக்கம் பாகல்மேடு, செம்பேடு, கொமக்கன்பேடு சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, வேலை சம்மந்தமாக செல்வார்கள்.

இதற்காக இந்த பகுதி மக்கள் விழுப்புரம் கோட்ட பேருந்துகளிலும், மாநகர பஸ்களிலும் செல்வார்கள். ஆனால் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படுவதில்லை. ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மாநகர பேருந்துகளும் போதிய அளவு இருப்பதில்லை. இதனால் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் மாநகர பேருந்து பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தாமரைப்பாக்கம் அருகில் அமணம்பாக்கம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் மாநகர பேருந்து பணிமனை மற்றும் மாநகர பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஐந்தரை ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து பெயர் பலகை வைத்து விட்டு சென்றனர். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேருந்து பணிமனை அமைப்பதற்கான வேலையை இதுவரை தொடங்கவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `அமணம்பாக்கத்தில் மாநகர போக்குவரத்து பணிமனையும், பேருந்து நிலையமும் அமைக்கப்படும் என முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின்னர் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே மாநகர பேருந்து பணிமனை வேலையை விரைவில் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:தாமரைப்பாக்கம் பகுதியில் மாநகர பேருந்து பணிமனையும், பேருந்து நிலையமும் அமைந்தால் வியாபாரிகளான எங்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக பாரிமுனைக்கு சென்று வாங்கி வர வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் தாமரைப்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் அல்லது மாதவரம் சென்று, பின்னர் பாரிமுனை பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, கிடப்பில் கிடக்கும் மாநகர பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைந்தால் ஏதுவாக இருக்கும். மேலும் பேருந்து பணிமனை வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் செய்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Thamaraipakkam ,Periypalayam ,Uthukkottai ,
× RELATED திருத்தணி அருகே நெல் கொள்முதல்...