×

ஆர்டிஓ நடவடிக்கை எடுப்பாரா? ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் இயக்கம்

சென்னிமலை,ஜூன் 6: சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதியில் ஒரே பதிவு எண்ணில் இரு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வேன் உரிமையாளர்கள் பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னிமலையில் உள்ள சுற்றுலா வேன் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனத்திற்கான பதிவு எண்ணை பயன்படுத்தி மற்றொரு வாகனமும் இதே பதிவு எண்ணில் வெவ்வேறு பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் மூலம் சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதியில் இருந்து சிப்காட் தொழிற்சாலைகளுக்கு ஆட்கள் அழைத்து செல்லப்பட்டு வருகிறது. இதனை நாங்கள் கண்டுபிடித்து பெருந்துறை ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் தொடர்ந்து ஒரே பதிவு எண் கொண்ட இரு வாகனங்களும் இயக்கப்பட்டு தான் வருகிறது.

இதேபோல் பெருந்துறையில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் ஒரே பதிவு எண்ணில் இரு வாகனங்கள் திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் ஆட்களை அழைத்து செல்வதற்காக ஓடிக்கொண்டிருந்தது. இதனை நாங்கள் ஆதாரத்துடன் பெருந்துறை ஆர்டிஓவிடம் தெரிவித்தோம். அவர் அது குறித்து காங்கயம் ஆர்டிஓவுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின்னரும் அங்கு ஒரே பதிவு எண்ணில் இரு வாகனங்களும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இப்படி முறைகேடாக ஒரே எண்ணில் இரு வாகனங்களை இயக்குவதால் முறையாக சுற்றுலா வேன்களை வாடகைக்கு ஓட்டும் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் ஆகியவற்றை ஒரு வாகனத்துக்கு பெற்று விட்டு, அதே பதிவு எண்ணை பயன்படுத்தி மோசடியாக மற்றொரு வாகனத்தையும் இயக்குவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் ஏதாவது விபத்தில் சிக்கினால் இதில் உயிரிழப்பு அல்லது காயம் அடைபவர்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதனால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஒரே எண்ணில் இரு வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags : RTO ,Chennimalai ,Perundurai Regional Transport Officer ,Perundurai ,
× RELATED திமுக தலைவரிடம் வாழ்த்து; மீனாட்சி...