×

வாழகுட்டையான் தோப்பு கிராமத்தில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் பேருந்து நிறுத்தம்

கறம்பக்குடி, ஜூன் 3: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளன. குறிப்பாக இந்த ஊராட்சியில் வாழ குட்டையான் தோப்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வாழக்குட்டையான் தோப்பு மக்களின் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டது.

இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருந்து ஏராளமானோர் தினம்தோறும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வந்தனர். இந்த பேருந்து நிறுத்த நிழற் குடையானது பழுதடைந்து, செடி கொடிகள் மண்டி உள்ளது. மேலும் பேருந்து நிறுத்து நிழற்குடையில் உள்ள சிமெண்ட் ஜன்னல்கள் பெயர்ந்து கீழே விழுந்து உள்ளது. சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து எந்த நேரத்தில் இடிந்து ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

இதனால் அந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். எனவே இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன், அப்பகுதி மக்களின் நலன் கருதி, புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags : Vazhakuttaiyan Thoppu ,Karambakudi ,Ambukovil panchayat ,Pudukkottai district ,
× RELATED தலைமை செயலக நுழைவாயில் அருகே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு