தூத்துக்குடி, ஜூன் 3:தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் கேட்டரிங் தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி- ராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கடந்த 29ம் தேதி பைக்கிற்கு பெட்ரோல் போட 3 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் அங்குள்ள கழிவறையில் சிறுநீர் கழிக்காமல், எரிபொருள் நிரப்பும் பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். இதை தட்டிக் கேட்ட பங்க் ஊழியருக்கும், சிறுநீர் கழித்தவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பங்க் ஊழியருடன் மற்ற 2 பேரும் தகராறு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள், மாலையில் 10 பேருடன் வந்து பெட்ரோல் பங்க்கை சூறையாடி விட்டு பைக்குகளில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து பங்க் ஊழியர் சவுரவ் (29) தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி காலங்கரையைச் சேர்ந்த சீனிவாசகம் மகன் பாரதி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் உள்பட 3 பேர் கேட்டரிங் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 29ம் தேதி இரவு ேவலை முடிந்து 3 பேரும் வரும்போது கீழஅரசடி பகுதியில் தாங்கள் வந்த பைக்கிற்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் பங்கிற்குள் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறை அடுத்து மாலையில் தங்கள் நண்பர்களை அழைத்து வந்து பங்க்கை சூறையாடியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
