×

ஊடகங்களில் படிப்பதையெல்லாம் தீர்ப்பில் பதிவிடுவது வேண்டாத விபரீதங்களை ஏற்படுத்தும் காவல் அதிகாரியை காத்திருக்க வைத்தது நியாயமா? சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கே.சந்துரு சரமாரி கேள்வி

சென்னை: ஊடகங்களில் படிப்பதையெல்லாம் தீர்ப்பில் பதிவிடுவது வேண்டாத விபரீதங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு காவல் அதிகாரியை காத்திருக்க வைத்தது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கே.சந்துரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: குண்டர் சட்டத்தில் கைதாக்கப்பட்ட சந்தோஷ் சர்மா என்ற நபர் தொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அதைப் பற்றி மேலும் விசாரித்ததற்காக காவல் அதிகாரி அருணுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.

காவல் அதிகாரி அருணுக்கு நீதிமன்ற அழைப்பாணையை சார்வு செய்யச் சென்ற நீதிமன்ற ஊழியர் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டார் என்ற தகவலை அறிந்த இரு நீதிபதிகள் அமர்வு காவல் அதிகாரியை நேரில் வரவழைத்தது. அதுமட்டுமின்றி இரண்டு மணி நேரம் காக்க வைத்த உரிய நபர்கள் மீது காரணம் கூறும்படி கேட்கப்பட்டது.  காவல் அதிகாரி முக்கியமான அலுவல் கூட்டத்தில் இருந்ததனால் அவர் உடனடியாக அழைப்பாணைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்ட காரணத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் அழைப்பாணையை ஏற்றுக் கொண்ட காவல் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜரான பிறகும் அவர் அழைக்கப்பட்டதற்கான உரிய வழக்கை விசாரிக்காமல் காலம் தாழ்த்திய நீதிபதிகள் அவரையும் நீதிமன்றத்தில் மாலை வரை காக்க வைத்தனர். இறுதியாக வழக்கு விசாரிக்கப்பட்ட போது ஏன் அவர் காத்திருக்க வைக்கப்பட்டார் என்பதற்கு பதிலாக காவல் அதிகாரியின் அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியர் காக்க வைக்கப்பட்டதை அவரும் அனுபவிக்க வேண்டும் என்ற முறையில் அவரும் காக்க வைக்கப்பட்டார் என்ற கருத்து கூறப்பட்டது.

நீதிபதிகள் இவ்வாறு நடந்து கொண்டது முறையான செயல் அல்ல. ஒருவரை நீதிமன்றத்திலேயே காக்க வைப்பது கூட ஒருவிதமான தண்டனையாக எடுத்துக்கொள்ள முடியும். சென்னை மாநகர கண்காணிப்பாளர் பதவியில் அருண் இருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட நிர்வாக குற்றவியல் நடுவர் என்ற அதிகாரத்தில் குண்டர் சட்டத்தில் பலரையும் தனது உத்தரவின் மூலம் சிறையில் வைப்பதற்கு உத்தரவிட்டார்.

அப்படிப்பட்ட ஒரு ஆணையை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்ற ஊழியரையும் காக்க வைத்ததற்காக அவரையும் மாலை வரை நீதிமன்றத்தில் நிற்க வைத்தது ஒரு பக்கமென்றால் மற்றொரு பக்கம் சந்தோஷ் சர்மா மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு காவல் சட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு எழுதினர். ரியல் எஸ்டேட்டுகள் நிர்வகிப்பதில் வரும் மோசடி வழக்குகளில் ஈடுபடுபவர்கள் கூட தொடர்ச்சியான பொருளாதார குற்றவாளிகள் என்று கருதப்படுவர். சந்தோஷ் சர்மா வழக்கில் ஆலோசனைக்குழு அவரை விடுதலை செய்வதற்கு உத்தரவிடாததோடு அதில் முகாந்திரம் இருப்பதாகக் கருதியது.

அதனால்தான் அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் ஆஜரான காவல் அதிகாரி அருண் நீதிமன்றத்தில், இந்த வழக்கைப் பொருத்தவரை சட்டப்படியான உத்தரவை பிறப்பித்தேன். சந்தோஷ் சர்மா பலரை ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க சந்தோஷ் சர்மாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டேன் என்று கூறினார்..

இருப்பினும், குண்டர் சட்ட உத்தரவை சிவில் வழக்குகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று கூறிய நீதிபதிகள் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுடைய தீர்ப்பில் அந்த உத்தரவைப் பிறப்பித்த காவல் அதிகாரி மீதும் தங்களது கருத்தை இவ்வாறு பதிவு செய்தனர். நீதிபதிகள் கூறும்போது, லஞ்ச ஒழிப்புத்துறையில் நேர்மையான அதிகாரிகளே இருக்க வேண்டும். அருண் இப்படி குண்டர் சட்டத்தை பிரயோகிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.  காத்திருப்புப் பட்டியலில் இருந்த அருண் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் இயக்குனர்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைப் போல லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் பதவியிலும் நற்பெயரும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளே இருக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது அறிவுரையை வழங்கியுள்ளனர். இது தேவையற்ற செயல். நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும் போது தங்களது முன்னால் உள்ள ஆவணங்களைப் பரிசீலித்து வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்டு அதன் பெயரில் தீர்ப்பு வழங்குவதுதான் முறையான நடவடிக்கை.

தங்களது சொந்தக் கருத்து மற்றும் ஊடகங்களில் படிப்பதையெல்லாம் தீர்ப்பில் பதிவு செய்வது என்பது வேண்டாத விபரீதங்களை உண்டாக்கும். குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் என்பதோடு ஏழை மக்களுக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும்தான் அதிகமாக பயன்படுத்தப்படும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் நீதிபதிகள் ஏன் 1982ம் வருடத்திய குண்டர் சட்டத்தையே ரத்து செய்ய முன்வரவில்லை என்பதை தெரிவித்தால் பயனளிக்கும். இவ்வாறு முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.

Tags : Former ,Madras High Court ,Judge ,K. Chandru ,Chennai ,High Court ,
× RELATED திருச்சி அருகே கார் மீது லாரி மோதல்...