மதுரை: அதிமுக மீண்டும் வலிமை பெறவேண்டும் என்று தற்கொலை செய்த தொண்டர் மகேந்திரனுக்கு மதுரை நகர் அதிமுக சார்பில் அஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: அதிமுக மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த பாதிப்புகளுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நோக்கங்கள் வெற்றி பெற அதிமுக வீறு கொண்டு எழ வேண்டும்.
அதிமுகவின் ஒற்றுமை கருதி இந்த துயரமான முடிவை மகேந்திரன் எடுத்துள்ளார். மகேந்திரன் உயிரிழப்பை படிப்பினையாக எடுத்துக் கொண்டு அதிமுகவில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செயல்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா தன்னை பற்றி பேசியவர்கள், ஏசியவர்கள் குறித்து கவலைப்படாமல் அவர்களை கட்சியில் சேர்த்து, தாயுள்ளத்தோடு நடந்து கொண்டனர். அவர்களை போலவே அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும். மகேந்திரனின் மரணம் அதிமுகவில் இறுதி மரணமாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா முக்கடல் சூழ்ந்த பாரதத்தில் மூன்றாவது பெரிய இயக்கமாக அதிமுகவை மாற்றிக் காட்டினார். அதே போன்று எழுச்சியை அதிமுக மீண்டும் பெற வேண்டும். அதற்கு தலைவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சில தலைவர்களை மீண்டும், அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த சூழலில் முதல்முறையாக செல்லூர் ராஜூ இதுபற்றி பேசியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
