×

பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய கனரக லாரி

செங்கல்பட்டு, ஜூன் 3: சென்னை பூந்தமல்லியில் இருந்து செங்கல்பட்டிற்கு குடிநீர் பாட்டில்கள் ஏற்றி கொண்டு ஒரு கனரக லாரி நேற்று முன்தினம் இரவு வந்தது. செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது. நீண்ட நேரமாக போராடியும் லாரியை இயக்க முடியாமல் ஓட்டுனர் தவித்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் முயற்சி நடந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி முடிவடைந்து விட்டது.

இருப்பினும் தோண்டிய பள்ளங்களை மூடாமல் அப்படியே கிடப்பில்போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
பல வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் வாகன போக்குவரத்து இன்னும் அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chengalpattu ,Poonamallee, Chennai ,Vedachalam Nagar ,
× RELATED மாமல்லபுரம் வெண்புருஷம் சாலையில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு