×

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒன்றிய அரசு நிறுவனத்தில் திடீர் வேலை நீக்கத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர், ஜூன் 2: முட்டுக்காட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்தில் திடீர் வேலை நீக்கத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தற்காலிகமாக வேலை நீக்கம் ரத்து செய்து, நிர்வாகம் அறித்துள்ளது. சென்னை அருகே முட்டுக்காட்டில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மூளை வளர்ச்சி குறைபாடு, கை, கால் செயலிழப்பு, காது கேட்காதவர்கள், பேச்சு வராதவர்கள் என பல்வேறு குறைபாடுகளை கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த சிகிச்சை பெறுபவர்களும், அவர்களது பெற்றோர்களும் அங்கேயே தங்கிக் கொள்ளும் வகையில் குடியிருப்புகளும் உள்ளன. இந்த நிறுவனத்தில் 23 பேர் நிரந்தர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை தவிர்த்து மருத்துவ உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பிளம்பர், எலக்ட்ரீஷியன், தோட்ட பராமரிப்பாளர்கள் என 250க்கும் மேற்பட்டோர் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக சுமார் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முதல் அவர்களில் 138 பேரை வேலைக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அனைத்து ஊழியர்களும் சேர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொடங்கி ஒன்றிய அமைச்சர், அரசு செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கோரிக்கை மனு அனுப்பினர்.

ஆனால், நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேற்று காலை 8 மணிக்கு வேலைக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு வந்த நோயாளிகள் அனுமதி சீட்டை பெற முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும், அவர்களுடைய பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் திடீரென கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்று
சாலையின் நடுவே அமர முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நிர்வாகத்தின் தரப்பில், கூடுதல் பதிவாளர் சந்தோஷ்கண்ணா, காவல்துறை உதவி ஆணையர் ரவி அபிராம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் முதற்கட்டமாக தற்காலிகமாக வேலை நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் வேலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து மற்ற முடிவுகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : Union Government ,Thiruporur ,Muttukad ,Chennai ,
× RELATED மத போதகர் வீட்டில் நகை, பணம் திருட்டு