திருப்போரூர், ஜூன் 2: கோவளம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்துப்பட்டுள்ளதால், உள்ளூர் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே யாருக்கும் பயன் இல்லாத இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி, கோவளம் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. ஓ.எம்.ஆர். சாலையில் செயல்பட்ட சுங்கச்சாவடிகள் அனைத்தும் கடந்த தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டன. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் பூஞ்சேரி சந்திப்பில் உள்ள இரண்டு சுங்கச் சாவடிகளும் முன்னதாகவே மூடப்பட்டன. தற்போது, உத்தண்டி மற்றும் கோவளம் ஆகிய இரு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் மட்டும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஒன்றிய அரசு இந்த சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி உள்ளது. அதன்படி கார், ஜீப், 3 சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் 2,890 ரூபாயில் இருந்து 2,960 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று வணிக வாகனங்களுக்கு 4,665 ரூபாயில் இருந்து 4,780 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஓ.எம்.ஆர். சாலையில் அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்பட்டு விட்ட நிலையில் இ.சி.ஆர். சாலையில் மட்டும் இரண்டு சுங்கச் சாவடிகளை செயல்பாட்டில் வைத்திருப்பது வாகன ஓட்டிகளை எரிச்சலடைய செய்துள்ளது.
கேளம்பாக்கம் பகுதியில் இருந்து கோவளம் செல்லும் வாகனங்களுக்கும், கோவளம் பகுதியில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வாகனங்களுக்கும் இங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், தற்போது பாஸ்ட் டேக் நடைமுறை வந்த பிறகு இந்த வாகனங்களில் இருந்தும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் புதுச்சேரி செல்பவர்கள் திருவான்மியூர் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாகவே செல்வர். ஓ.எம்.ஆர். சாலை வழியாக புதுச்சேரி நோக்கி செல்பவர்கள் திருப்போரூர் பூஞ்சேரி வழியாகவே செல்கின்றனர். புதுச்சேரி செல்லும் வாகனங்களுக்கு கோவளத்தில் உள்ள சுங்கச்சாவடி மூலமாக எந்த வசூலையும் மேற்கொள்ள முடியாது. இதுபோன்ற உள்ளூர்
வாகனங்களின் பாஸ்ட் டேக் நடைமுறையால் பணம் இழக்கும் பொதுமக்கள் கோவளம் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
கோவளத்தில் உள்ள மீனவர்கள், கேளம்பாக்கத்தில் உள்ள மீன் மார்கெட்டில் தங்களின் மீன்களை விற்க செல்வர். அதேபோன்று, பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோரும் இந்த சுங்கச் சாவடியை கடந்தே செல்கின்றனர். உள்ளூர் வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் முறையில் பணம் கழிக்கப்படுவதால் தினமும் கணிசமான பணத்தை இழப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த, சுங்கச்சாவடியில் இருந்து வசூலாகும் பணத்தைக் கொண்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாது. எனவே, யாருக்கும் பயன் இல்லாத இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
