×

திருச்சி அருகே கார் மீது லாரி மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

முசிறி: திருச்சி அருகே கார் மீது லாரி மோதியதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் அருகே வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கவிதாவுக்கு திருமணமாகி ரங்கத்தில் கணவர் கார் டிரைவரான பாலசுப்பிரமணியத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஏகவன் (1) என்ற ஒரு மகன் உள்ளான். மற்றொரு மகள் நர்மதா, மகன் கார்த்திக் ஆகியோருக்கு திருமணமாகவில்லை. இதில் கார்த்திக்குக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால் அதற்கான பரிகார பூஜை செய்வதற்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் மருமகன் காரில் செல்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு முருகேசன் ரங்கம் வந்துள்ளார். நேற்று அதிகாலை பாலசுப்பிரமணியன் தனது காரில் குடும்பத்தினர் அனைவரையும் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கு பரிகார பூஜைகள் முடிந்ததும், மாமனார் குடும்பத்தினரை பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தில் விடுவதற்காக முசிறி – துறையூர் சாலை வழியாக வந்தார்.

காரை பாலசுப்பிரமணியன் ஓட்டினார். முசிறி – துறையூர் சாலையில் ஜம்புநாதபுரம் அருகே நேற்று மதியம் வந்து கொண்டிருந்த போது காஞ்சிபுரத்திலிருந்து கரூர் புலியூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பாதுகாப்பு காலணிகளை ஏற்றி வந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் பாலசுப்பிரமணியன் (31), மனைவி கவிதா (26), மைத்துனர் கார்த்திக் (29), மாமனார் முருகேசன் (50) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவர் ஞானசூரியன் (28) கைது செய்யப்பட்டார்.

Tags : Trichy ,Musiri ,Murugesan ,Vellanoor village ,Perambalur.… ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...