×

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் முடிவு

திருச்சி: பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது. தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். கூட்டத்தில், கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பாசனத்தில் ஒருபோக விவசாயம் கூட செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் உணவு பஞ்சம் ஏற்படும்.

20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைக்காது. எனவே காவிரியின் குறுக்கே மேகதாதில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு துணை போகக்கூடாது. அணை கட்டுவதற்கு முயற்சித்தால் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக கட்சியின் முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின்படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். முழுமையாக கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : union ,Tamil Nadu ,Trichy ,Trichy Chatthiram ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...