×

லஞ்சம் வாங்கியது, மது அருந்தியதாக புகார்; எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்: காவலர் அதிரடி டிஸ்மிஸ்

பழநி: லஞ்சம் வாங்கியது, மது அருந்தியதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, ஏட்டு, சிறப்பு எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்தும், முதல்நிலை காவலரை பணிநீக்கம் செய்தும் டிஐஜி உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் பணியில் ஒழுங்கீனமாக நடக்கும் காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழநி சரகத்திற்கு உட்பட்ட சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக மணிகண்டன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றினார். அங்கு அவர் பணியின்போது மது அருந்தி வந்தது, உயரதிகாரிகளின் பேச்சை கேட்காதது உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதேபோல் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு சுதாராணி, சிறப்பு எஸ்ஐ ராஜூ ஆகியோர் ஒரு விபத்து வழக்கில் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

எனவே, இவர்கள் 3 பேர் மீதும் பணியின்போது ஒழுங்கீனமாகவும், கவனக்குறைவுடன் நடந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மூவரும் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உறுதியானது. இதையடுத்து எஸ்பி பிரதீப் பரிந்துரையின்பேரில் முதல்நிலை காவலர் மணிகண்டனை பணிநீக்கம் செய்தும், ஏட்டு சுதாராணி, சிறப்பு எஸ்ஐ ராஜூ ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டார். இது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமூல் கேட்டு மிரட்டிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்; மதுரை ஒத்தக்கடையில் கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் கம்பிகளை விற்கும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை நேரத்தில் அந்த கடையில் கம்பிகளுடன்லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. கம்பிகளை இறக்கி வைக்க லோடுமேன்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்ஐ மகேந்திரன், ‘‘டிராபிக் பிரச்னை ஏற்படுகிறது. லாரியை உடனே எடுக்க வேண்டும்’’ என்கிறார். அதற்கு லோடுமேன்கள், ‘‘சார். லாரி ரோட்டு ஓரத்தில்தான் நிறுத்தப்பட்டுள்ளது. லாரிக்கும், ரோட்டிற்கும் சம்பந்தமில்லையே’’ என்கின்றனர். அதற்கு எஸ்எஸ்ஐ, ‘‘இது டிராபிக் நியூசென்ஸ் சரியா. மாமூல் கொடுக்க வேண்டும்’’ என்கிறார்.

உடனே லோடுமேன்கள், ‘‘எதற்கு சார் பணம் கொடுக்க வேண்டும்? லாரி ரோட்டு ஓரத்தில்தானே நிறுத்தப்பட்டுள்ளது’’ என்கின்றனர். அதற்கு எஸ்எஸ்ஐ, ‘‘சத்தமாக ேபசாதீங்க… முதல் போணி… இல்லைணு சொல்லாதீங்க… இருக்கிறத கொடுங்க’’ என்கிறார். ‘‘சார்… நாங்க என்ன பூ வியாபாரமா பார்க்கிறோம். இல்லை கத்திரிக்கா வியாபாரம் பார்க்கிறோமா? பணமெல்லாமல் கொடுக்க முடியாது’’ என்கின்றனர். எதிர்ப்பு அதிகமாகவே டூவீலரை எடுத்துக்கொண்டு, எஸ்எஸ்ஐ மகேந்திரன் கிளம்பி விடுகிறார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ துறைரீதியிலான நடவடிக்கைக்காக மதுரை கமிஷனர் அபிஷேக் தீக்‌ஷித் வசம் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எஸ்எஸ்ஐ மகேந்திரனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

Tags : Aettu ,Palani ,DIG ,Dindigul District Police Department ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...