×

அரசு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் பகுதியில் தொடர்ந்து இயங்கும் டாஸ்மாக் கடைகள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

 

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் இயங்கி வரும் இரண்டு டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள் நலன் கருதி மூடப்படும் என கடந்த மாதம் புதிதாக பொறுப்பேற்ற அரசு அறிவித்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள் அரசின் நடவடிக்கையை வரவேற்றனர். இதற்கிடையே அந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலக்கெடு முடிவடைந்தபின்னரும் மேற்கண்ட 2 கடைகளும் அடைக்கப்படாமல் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன.

மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பெண்கள், முதியோர் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து சிரமமடைந்து வருகின்றனர். அதேபோல் பள்ளி அருகே செயல்படும் கடையால் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளி முடியும் நேரங்களில் அருகில் உள்ள கடைக்கு மதுபானம் வாங்க வருவோரின் நடமாட்டம் அதிளவில் உள்ளதால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அரசின் உத்தரவுகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘‘மேற்கண்ட பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அரசு உத்தரவு வெற்று அறிவிப்பாகவே உள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி, மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Tasmak ,Otansatram ,Ottansatram ,Dindigul district ,Ottansatram market ,
× RELATED வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் பட்டா...