×

தண்ணீரின்றி பயணிக்கும் திருக்குறள் எக்ஸ்பிரஸ்: பயணிகள் திண்டாட்டம்

 

நெல்லை: கன்னியாகுமரியில் இருந்து தென்மாவட்டங்கள் வழியாக புதுடில்லிக்கு செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரசில் போதிய தண்ணீர் ஏற்றப்படாததால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தென்முனையாம் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, சென்னை வழியாக தலைநகர் புதுடில்லிக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரம் இருமுறை பயணிக்கும் இந்த ரயிலில் தலைநகர் டில்லிக்கு செல்வோர் மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோரும் அதிகம் பயணித்து வருகின்றனர். கன்னியாகுமரியில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ், நெல்லைக்கு இரவு 10.20 மணிக்கு வந்து, 3வது தினம் மாலை 6.35 மணிக்கு டில்லி போய் சேருகிறது.

இந்த ரயிலில் சமீபகாலமாக தமிழக எல்கை பகுதிகளில் தண்ணீர் முறையாக ஏற்றப்படுவதில்லை. இதனால் கழிவறை மற்றும் வாஷ்பேசின் பயன்படுத்தும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் கழிப்பறை பயன்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இரவு நேரத்தில் தென்மாவட்டங்களில் பயணிக்கும் இந்த ரயிலை நம்பி சென்னை செல்வோரும் அதிகம். இந்த ரயிலில் தேவையான அளவு தண்ணீரை நிரப்பி இயக்கிட வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அயூப் மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி முதல் புதுடில்லி வரை சுமார் 2 ஆயிரத்து 926 கிமீ தூரம் பயணிக்கும் இந்த ரயிலில் குறைந்தபட்சம் ஒவ்வொரு 700 கிமீ ஒருமுறையாவது தண்ணீர் நிரப்புவது நல்லது என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. பல சமயங்களில் தண்ணீரின்றி இந்த ரயில் அனுப்பப்படுவதால், தொலை தூரம் பயணிகள் பயணிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், சரி செய்கிறோம் என வெற்று பதிலே அளிக்கப்படுகிறது. எனவே தென்மாவட்டங்கள் வழியாக இந்திய தலைநகருக்கு பயணிக்கும் திருக்குறள் எக்ஸ்பிரசில் தண்ணீர் நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags : EXPRESS ,Nella ,Thirukulal Express ,Kanyakumari ,New Delhi ,Thirukkural Express ,Thenmunayam Kanyakumari ,Madurai ,Chennai ,
× RELATED அரசு பஸ் பழுதால் அடர்ந்த...