பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.; தலைமை ஆசிரியர் அறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த “ஸ்வீட் பீர்” பாட்டிலை அகற்ற உத்தரவு

 

பல்லாவரம்: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காமாட்சி, பள்ளி திறப்பு நெருங்கி வரும் நிலையில் குரோம்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பள்ளியின் கல்வித் தரம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், சேர்க்கை நிலவரம் மற்றும் ஒழுக்கம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்த அவர், ஒரு பகுதியில் பயன்பாடின்றி கிடந்த கழிவறையை கவனித்து அதன் காரணம் குறித்து விசாரித்தார்.

அதற்கு கழிவுநீர் குழாய் இணைப்பு வழங்கப்படாததால் அந்த கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்தார். இதையடுத்து பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் வகையில் பணிகள் நடைபெறக்கூடாது என எம்.எல்.ஏ. கடிந்து கொண்டார். பின்னர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற அவர், அங்குள்ள கண்ணாடி ஷோகேஸில் மாணவர்கள் பெற்ற கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை பார்வையிட்டார்.

அப்போது அவற்றுடன் “ஸ்வீட் பீர்” என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பாட்டிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். இதுகுறித்து ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டபோது, சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவர் அந்த பானத்தை குடித்துக்கொண்டிருந்ததாகவும், அதனை முதலில் போதைப்பொருள் வகையைச் சேர்ந்தது என ஆசிரியர்கள் சந்தேகித்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் மாணவரிடம் விசாரித்தபோது அது போதைப்பானம் அல்ல என்பது தெரியவந்ததோடு, அதே வகை பாட்டிலை வாங்கி வருமாறு ஆசிரியர்களே மாணவரிடம் கூறியதாகவும் விளக்கம் அளித்தனர்.

மேலும், அந்த பாட்டில் வெளிப்படையாக மதுபான பீர் பாட்டிலைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் மாணவர்களிடையே தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, விழிப்புணர்வு நோக்கத்திற்காகவே அதை காட்சிப்படுத்தியிருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் அதன் வடிவமைப்பை மாற்றுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினர். ஆனால் ஆசிரியர்களின் இந்த விளக்கத்தை ஏற்காத எம்.எல்.ஏ. காமாட்சி, மாணவர்கள் பெற்ற சாதனைகளுக்கான கோப்பைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இத்தகைய பாட்டிலை காட்சிப்படுத்துவது பொருத்தமற்றது எனக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இருந்தாலும் அதற்கான வேறு வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் கூறி, அந்த பாட்டிலை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: