விழுப்புரம்: சென்னை, கோயம்பேட்டில் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளம்பெண்ணின் உடல் அவர் வசிக்கும் கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. அதன் உள்புறம் உள்ள மதுபாரில் கடந்த 30ம்தேதி இரவு 11 மணியளவில் இருதரப்பினர் மது அருந்தியபோது, அவர்களுக்குள் நடனமாடுவதில் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் உடனடியாக வெளியேற்றினர். கோயம்பேடு பாலத்துக்கு கீழே பைக்கில் முன்னால் சென்ற ஒரு தரப்பினர் மீது பின்னால் காரில் சென்ற மற்றொரு தரப்பினர் மோதினர்.
இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியை சேர்ந்த யான்சி (19) என்ற இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால், அமர்ந்திருந்த 17 வயது சிறுமிக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய பாலகுரு, ேஜாஷ்வா, கிஷோர்குமார், சக்திவேல், விமல், கோமகன், ராகுல் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொல்லப்பட்ட யான்சியின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யான்சியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை யான்சியின் உடல் கீழ்புத்துப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
