×

திருந்த மாட்டாங்கய்யா… திருந்த மாட்டாங்க கியூஆர் கோடு டோக்கன் பிளாக்கில் சேல்ஸ் திருச்சி விஜய் கூட்டத்தில் நடந்த கூத்து: போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி

 

திருச்சி: முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக தவெக தலைவர் விஜய் நேற்று திருச்சி வந்தார். சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இதில் கலந்து கொள்ள விஜய் தனி விமானத்தில் பிற்பகல் 2.45 மணியளவில் திருச்சி வந்தார். ஆனால் காலை 11.30 மணியில் இருந்தே சத்திரம் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. மாநகர பகுதிகளில் இருந்து சத்திரத்துக்கு வரும் பஸ்கள் மெயின்கார்டுகேட் காந்தி சிலை அருகிலும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மற்றும் துறையூர், முசிறி, லால்குடி பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் மாம்பழச்சாலையிலும், பயணிகளை இறக்கி விட்டன.

இதனால் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பழச்சாலைக்கும், மாம்பழச்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கும் பெண்கள், குழந்தைகள், முதியோர் சுட்டெரிக்கும் வெயிலில் காவிரி பாலத்தை கடந்து ஒன்றரை கிமீ தூரம் நடந்தே சென்றனர். ‘‘மாற்றம் வேண்டும் என்பதற்காக விஜய்க்கு வாக்களித்தோம். இப்போது அவதிப்படுகிறோம். ஆட்டோவுக்கு ரூ.150, ரூ.200 கொடுத்து போக எங்களிடம் பணம் இல்லை. பிரதமரே வந்தாலும் காவிரி பாலத்தை பிளாக் பண்ண மாட்டாங்க. முதல்வருக்காக காவிரி பாலத்தை பிளாக் பண்ணுவது இதுவே முதல் தடவை என்று மக்கள் வேதனையுடன் கூறினர். முதல்வர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் 5,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மதியம் 1 மணி முதல் கியூஆர் கோடு டோக்கன் வைத்திருந்தவர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். மதியம் 2.30 மணி வரை கூட்டரங்கில் இருந்த நாற்காலிகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் டோக்கன் இல்லாதவர்களும் கூட்டரங்குக்குள் வரலாம் என்று மைக்கில் அறிவித்தனர். இதனால் பலர் டோக்கன் இல்லாமல் உள்ளே நுழைந்தனர். பின்னர் நாற்காலிகள் நிரம்பியதால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் டோக்கனுடன் வந்திருந்த தவெகவினரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பாஸ் வைத்திருக்கும் நாங்கள் இங்கு இருக்கிறோம். உள்ளே இருப்பது யார்? என்று கேள்வி கேட்டனர். மேலும் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷம் எழுப்பினர். அதேநேரம் கியூஆர் கோடு டோக்கனை சிலர் பிளாக்கில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை கொடுத்து வாங்கி வந்ததாக கூறினர்.
பிரசார வாகனத்தில் நின்று விஜய் பேசி முடித்த பிறகு அவருடன் கட்சி நிர்வாகிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர். ஆனால் திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற மற்ற தவெக எம்எல்ஏக்கள் அந்த வாகனத்தின் மேல் ஏற்றப்படவில்லை. இதனால் எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags : Trichy ,Vijay ,Thavega ,Chief Minister ,East ,Chatthiram ,
× RELATED வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம்...