×

தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் பாராமெடிக்கல் மாணவர்கள்

 

திருச்சி, ஜூன் 2: திருச்சி மாவட்டம் நொச்சியம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பாராமெடிக்கல் பட்டம் படிக்கும் மாணவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியை அடுத்த துடையூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பாராமெடிக்கல் பட்டம் (மருத்துவ உபகரணங்கள் சார்ந்து, செவிலியம்) படிக்கும் மாணவர்கள் 200ம் மேற்பட்டோர் படித்து வருகிறோம். எங்களின் பட்டம் முடிக்க தேவையான ஆண்டு தொகையை பெற்றுக்கொண்ட கல்லூரி மேலாண்மை போதிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை. அதாவது அடிப்படை வசதிகள் கூட சரிவர இல்லை.

கழிப்பறை, உணவு, இருப்பிடம் போன்ற எதுவும் பாதுகாப்பானதாக இல்லை. குடிநீரில் கலப்படம் உள்ளது. உணவு பண்டங்களும் தரமானதாக இல்லை, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரியில் படித்து வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் இல்லை. அதோடு தகுதியற்ற பேராசிரியர்கள் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது, இதுகுறித்து கல்லூரி மேலாண்மையிடம் எடுத்துரைத்தால் கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் தேர்வு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மாணவர்களை மிரட்டுகின்றனர்.

மேலும் மாணவிகள் தவறான செயல்களில் ஈடுபட வற்புறுத்தப்படுகின்றனர். அதோடு கல்லூரியில் ஆபத்து நேரத்தில் பயன்படும் தீயணைப்பு உபகரணங்கள் போன்ற எதுவும் உரிய முறையில் இல்லை. கல்லூரி வளாகத்திற்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும், கல்லூரியின் உரிமம் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் கலெக்டர் அலுவலகம் முன் குவிந்து கோஷம் எழுப்பினர்.

 

Tags : Trichy ,Nochchiyam ,Thudaiyur ,Trichy… ,
× RELATED அரசு மருத்துவமனையில் தாலியை பறித்தவர் கைது