×

கல்குவாரி அமைக்க வழங்கிய உத்தரவை ரத்து செய்யுங்கள்

 

திருச்சி, ஜூன் 2:கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மருங்காபுரி வட்டார கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம், செவந்தாம்பட்டி, மருதம்பட்டி, ஆலம்பட்டி ஊர் மக்கள் குறைதீர் முகாமின்போது கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, எங்கள் கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை வாழ்வாதாராமாக நம்பி உள்ளவர்கள். இந்நிலையில் செவந்தம்பட்டி, மற்றும் மருதம்பட்டி கிராமங்கள் அருகே சுமார் 16 ஏக்கரின் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல்துறை புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரம் மரங்கள், 10 ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டது. தற்போது இந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள நிலத்தை சிலர் விவசாய பயன்பாட்டிற்கு என பெற்றக்கொண்டு அங்கு கல்குவாரி அமைக்க திட்டமிட்டு அனுமதி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அங்கு கல்குவாரி அமைந்தால் எங்கள் கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். கல்குவாரி அமைந்தால் விவசாயம், நிலத்தடி நீர், மக்கள் தினசரி வாழ்க்கை என அனைத்தும் பாதிக்கப்படும் எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு கல்குவாரி அமைக்க உரிமம் வழங்கப்பட்டிருப்பின் அதை உடனடியாக ரத்து செய்து விவசாயம் மற்றும் கிராம மக்கள் வாழ்வாதாரம் காக்க வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Trichy ,Marungapuri ,Sevanthampatti ,Marudhampatti ,Alampatti ,Trichy district ,
× RELATED அரசு மருத்துவமனையில் தாலியை பறித்தவர் கைது