×

நாளைமறுநாள் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு சீருடை, புத்தக பை, ஷூ விற்பனை தீவிரம்

ஈரோடு,ஜூன்2: ஈரோட்டில் நாளைமறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் சீருடைகள், புத்தக பை, ஷூ போன்றவை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பொதுத்தேர்வும் நிறைவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை வருகிற ஜூன் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைந்து, ஒரே கட்டமாக 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாளைமறுநாள்(4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட்டு, 2026-2027ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், அன்றைய தினமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பை முன்னிட்டு ஈரோடு கடை வீதி என அழைக்கப்படும் பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்கேவி சாலை, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ரெடிமேடு சீருடைகள், புத்தக பை (பேக்), காலணி (ஷூ), தண்ணீர் பாட்டில் போன்றவற்றை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோருடன் நேற்று கடை வீதிகளுக்கு வந்து அவர்களுக்கு தேவையான சீருடைகளையும் ரெடிமேடாகவும், துணிகளாகவும் வாங்கி சென்றனர். இதேபோல், அவர்களுக்கு பிடித்த புத்தக பை, ஷூ, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

 

Tags : Erode ,Tamil Nadu ,
× RELATED விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள்