×

ஹாலிவுட் நடிகரின் மகளுக்கு வந்த சோதனை; குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் மோதல்: காதலன் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸின் மகள் ரூமர் வில்லிஸ், தனது முன்னாள் காதலர் டெரெக் ரிச்சர்ட் தாமஸ் மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான புரூஸ் வில்லிஸ் மற்றும் டெமி மூர் தம்பதியரின் மகளான நடிகை ரூமர் வில்லிஸ், கடந்த 2022ம் ஆண்டில் இசைக்கலைஞர் டெரெக் ரிச்சர்ட் தாமஸ் என்பவருடன் பழகத் தொடங்கினார். இவர்களது உறவு பொதுமக்களுக்குத் தெரிந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இவர்களுக்கு லூயெட்டா என்ற பெண் குழந்தை பிறந்தது.

தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2024ம் ஆண்டில் இவர்கள் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். பிரிந்த பிறகும் தங்களது குழந்தையை இருவரும் இணைந்து வளர்த்து வருவதாக ரூமர் வில்லிஸ் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தங்களது பெண் குழந்தையை யார் தன்னிடம் வைத்துக் கொள்வது என்ற நீதிமன்றப் போராட்டத்தில் ரூமர் வில்லிஸ் தனது முன்னாள் காதலர் மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின்படி, குழந்தையை முழுமையாகத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், முறையான மதிப்பீடு முடியும் வரை டெரெக் ரிச்சர்ட் தாமஸுடன் குழந்தை இரவு நேரங்களில் தங்குவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் ரூமர் வில்லிஸ் கோரியுள்ளார். தங்களுக்குள் உறவு நீடித்திருந்த காலத்தில் தாமஸ் தன்னை தொடர்ச்சியான குடும்ப வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், சித்திரவதை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் அதிகளவில் கஞ்சா பயன்படுத்தியதாகவும், ஒருமுறை கஞ்சா போதையில் குழந்தையை கவனிக்க முடியாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள டெரெக் ரிச்சர்ட் தாமஸ், தங்களுக்குள் ஆரோக்கியமற்ற உறவு இருந்ததே தவிர, `நான் எந்த வடிவத்திலும் குடும்ப வன்முறையில் ஈடுபடவில்லை’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ரூமரின் தாயான டெமி மூர், குழந்தை பிறப்பின் போது தாமஸ் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார் என்று தனது மகள் ரூமருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

Tags : Hollywood ,Bakeer ,Los Angeles ,Roomer Willis ,Bruce Willis ,Derek Richard Thomas ,Demi Moore ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன்...