×

அமெரிக்காவில் கோவிட் காலத்தில் இருந்ததை விட தற்போது மோசமாகி இருக்கும் பசி பிரச்சனை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா காலத்தை விட தற்போது உணவுப்பற்றாக்குறை மற்றும் பசி பிரச்சனை மோசமடைந்து இருப்பதாக நியூயார்க் ஃபெடரல் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் பல மாகாணங்களில் சுமார் 1200 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், செலவுகளை சமாளிக்க நீங்கள் சேமிப்பு அல்லது அவசர கால கணக்குகளில் இருந்து பணம் எடுக்க வேண்டிய சூழல் உருவானதா! போதிய உணவு கிடைக்காமல் நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ சிரமப்படுகிறீர்களா? உணவு அல்லது மளிகை பொருட்களை வாங்குவதற்காக உணவு நன்கொடைகள் அல்லது அரசாங்க உதவியை பெற்றீர்களா என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள அமெரிக்க மக்களின் பதில்கள் தற்போது அமெரிக்காவில் பசி ஒரு பரவலான மற்றும் முக்கிய பிரச்சனையாக உள்ளதை காட்டுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த போது 4 சதவீத குடும்பங்கள் மட்டுமே எங்களுக்கு போதிய உணவுகள் கிடைக்கவில்லை அல்லது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போதைய சூழலில் அந்த எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறி இருக்கிறது.

அதே போல 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 21.8% குடும்பங்கள் சேமிப்பை பயன்படுத்தியதாக கூறி இருந்ததாகவும், அது தற்போது 33 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் உணவுக்கே போராடும் நிலை உருவாகியுள்ளதாக நியூயார்க் ஃபெடரல் வங்கியின் ஆய்வு எச்சரித்து உள்ளது. குறிப்பாகக் குறைந்த கல்வி மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களிடையே உணவுப் பாதுகாப்பின்மையில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாங்கள் காண்கிறோம் என்று ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

Tags : United States ,Washington ,Federal Bank of New York ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன்...